பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/நினைவின் மறுபுறம் ※ 691

பேச்சில் எனக்கு முழு வெற்றியைக் கொடுத்தது. கேலி செய்தால்கூட அந்தக் கேலி உன்னைப் பற்றியதாயிருக்கிறது என்ற பெருமிதத்தினால் தான் கம்பீரமாக நிமிர்ந்து நின்று பேசினேனாக்கும்.”

“செய்வதையும் செய்துவிட்டு இப்போது அதற்கு இப்படி ஒரு விளக்கமா?”

“இன்று நீ எவ்வளவு அழகாகக் காட்சியளித்தாய் என்று நினைத்து நினைத்து அந்த நினைப்பின் ஏக்கத்திலேயே சிறிது நேரத்திற்கு முன் நான் ஒரு கவிதை இயற்றியிருக்கிறேன், செங்கமலம் அதைப் பாடிக் காட்டுவதற்குத்தான் இந்த அகால வேளையில் உன்னை டெலிபோனில் கூப்பிட்டேன்.”

“நான்ஸென்ஸ்: வெட்கமாயில்லை, உங்களுக்கு”

இப்போதும் இப்படிச் சொல்லிச் சீற்றத்தோடு டெலிபோனை வைக்க நினைத்து அவளால் அப்படிச் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம்? அந்தக் கவிதையில் அவன் என்ன தான் பாடியிருப்பான் என்று அறிந்து கொள்ளும் ஆவல் செங்கமலத்தைத் தடுத்தது.

“கவிதை மிக அழகாக வாய்திருக்கிறது செங்கமலம்! அதை இப்போதே உன்னிடம் பாடிக் காட்டாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது!”

“நீங்கள் கடைசியாகச் சொன்னது உங்களுக்கு இனிமேல்தான் பிடிக்க வேண்டுமா என்ன?”

“இல்லை! உன்னைப் பார்த்த முதல் விநாடியிலிருந்தே பிடித்துவிட்டது, செங்கமலம் பாட்டைப் படிக்கிறேன், கேள்!”

செங்கமலம் அவனுக்குப் பதில் சொல்லுவதற்குள் விடுதிப் பணிப்பெண் அருகே வந்துவிட்டாள்.

“என்னம்மா இது? முக்கால் மணி நேரமாக டெலிபோனைக் கீழே வைக்காமல் பேசிக் கொண்டேயிருக்கீங்களே! ஹை ஸ்கூலிலே விட்டுப் பிரிஞ்சப்புறம் நீங்களும் உங்க தோழியுமா பரஸ்பரம் வாழ்க்கை வரலாற்றையே போனிலே பேசிடுவீங்க போலிருக்கே!” என்று கேட்டுச் சிரித்தாள் அந்தப் பணிப்பெண். செங்கமலத்தின் நிலை தர்மசங்கடமாகிவிட்டது. டெலிபோனில் எதிர்ப்புறமிருந்து பேசுகிறவருடைய குரல் ரீஸீவரையும் மீறி வெளியே கேட்க முடிந்த அளவு அருகில் வந்து நிற்கிறாள் விடுதிப் பணிப்பெண். தண்டபாணியோ டெலிபோனில் கவிதை பாட ஆரம்பித்துவிட்டான்.

“கருமேகக் காட்டினிலே - நீ ஒர்
கனக மின்னலம்டீ!...”

பணிப் பெண்ணைத் தன் பக்கத்தில் நிற்க விடாமல் செய்வதற்காகக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்பது போல் ஜாடை காட்டினாள் செங்கமலம் பணிப்பெண் தண்ணிர் கொண்டு வருவதற்காகப் போனாள்.அவள் தலைமறைந்ததோ இல்லையோ, செங்கமலம் டெலிபோனில் சீறினாள். இல்லை; சீறுவதுபோல் ஆரம்பித்துச் சாதாரணமாகவே பேசினாள்.