பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

690 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

“ஹைஸ்கூல் தோழியா? நல்ல ஹைஸ்கூல் தோழி வந்தாள்! இராத்திரி பத்து மணிக்கு மேலேயா இவளுக்கு என் ஞாபகம் வர வேனும்?” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிக் கொண்டே டெலிபோன் இருக்கிற இடத்தை நோக்கி நடந்தாள் செங்கமலம். போய் டெலிபோனைக் கையிலெடுத்து ‘யார்? செங்கமலம் பேசுகிறேன்’ என்று பேச்சைஆரம்பித்தால் எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு விநாடி குரலே இல்லை. அடுத்த விநாடி ஆண்குரல்-அந்தத்“” தடியன் தண்டபாணியின் குரல் ஒலித்தது.

“நான்தான் தண்டபாணி பேசுகிறேன். முதலிலே யாரோ வேலைக்காரி டெலிபோனை எடுத்தாள். அல்லியரசாணிக் கோட்டை மாதிரி இருக்கிற உங்கள் லேடீஸ் ஹாஸ்டலிலே இராத்திரி பத்து மணிக்கு மேலே நான் ஆண் குரலிலே பேசினால் விடுவார்களா? அதனாலே ஒரு தந்திரம் பண்ணினேன். குரலைப் பெண்கள் பேசுகிற மாதிரி மாற்றிக் கொண்டு உன் ஹை ஸ்கூல் காலத்துத் தோழியாக மாறி உன்னோடு உடனே பேசியாக வேண்டுமென்றேன்.”

“நான்ஸென்ஸ், வெட்கமாயில்லை. உங்களுக்கு?” என்று கடுமையாகக் கேட்டுவிட்டு எதிர்ப்பக்கத்தில் காது உடைவதுபோல் கேட்கும்படி டெலிபோனை ‘ணங்’ கென்று வைத்துவிட நினைத்தாள் அவள். ஆனால் அப்படி மூஞ்சியில் அடித்தாற்போல் வைத்துவிடவும் மனம் வரவில்லை.இந்த அர்த்தராத்திரி வேளையில் அவன் தனக்கு எதற்காக டெலிபோன் செய்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலவும் ஆசையாக இருந்தது.பக்கத்தில் கூட யாரும் இல்லை. விடுதிப் பணிப்பெண் வேறு எங்கோ போயிருந்தாள். செங்கமலமும், டெலிபோனும் அந்த இடத்தில் போனுக்காக எரிந்துகொண்டிருந்தமங்கலான மின்சார விளக்கும் இரவும் அமைதியும் தவிர அந்தப் பிரதேசம் தனிமையாக இருந்தது.

டெலிபோனில் எதிர்ப்புறமிருந்து குரல் குழைந்தது. “நான் பேசுகிறது பிடிக்கவில்லை போலிருக்கிறதே!”

“பேசுவதற்கு இன்னும் என்ன மீதம் வைத்திருக்கிறீர்கள்? அதுதான் பேச வேண்டியதை எல்லாம் சாயங்காலம் கூட்டத்தில் பேசிவிட்டீர்களே!”

“அதெல்லாம் சும்மா தமாஷ். ஏதோ கூட்டத்திற்குச் சிரிப்பு மூட்ட வேணும் என்பதற்காகச் சொன்னதை எல்லாம் பெரிதாக நினைத்து மனசிலே வைக்கக் கூடாது. நானே கூட்டம் முடிந்ததும் உன்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்க நினைத்திருந்தேன். நீ விடுவிடென்று புறப்பட்டுப் போய்விட்டாய்.”

“உங்களுக்கென்ன?ஜெயித்த கட்சிக்காரர்கள் எதை வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் இப்போது மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம்.”

“தப்பு உண்மையிலேயே நீதான் ஜயித்த கட்சிக்காரி, நீல நிறத்தில் வெள்ளைக் பூப்போட்ட வாயில் புடவையோடு மேகத்தைச் சுற்றிக்கெண்டு மின்னல் வந்து நின்ற மாதிரி நீ மேடையில் நின்று பேசியபோது நான் முதலில் உன்னுடைய அழகுக்குத் தோற்றுப்போனேன் என்ற இரகசியம் உனக்குத் தெரியுமோ செங்கமலம்? உன்னுடைய அழகுக்குத் தோற்றபின்பு அந்த இரகசியத் தோல்வியினால் நான் பெற்ற விழிப்புதான்