பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/நினைவின் மறுபுறம் 🞸 677

‘எத்தனை திமிரும் துணிவும் இருந்தால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் எனக்கு முன்பே என்னைப் பற்றிக் கேலி செய்து சிரிக்க முடியும்?’ என்ற நினைத்தபோது உள்ளங்கையையும் புறங்கையையும் போல் ஒரே நினைவின் இரண்டு பக்கங்களாக அவனுடைய திமிர் என்ற ஒற்றை ஞாபகத்தைப் பொருளாக வைத்துக் கொண்டு அவளுள் வெறுப்பும் எழுந்தது. அன்பும் மலர்ந்தது. அந்த முரட்டுத்தனத்துக்காகவே அவனை வெறுக்கவேண்டும் போலவும் இருந்தது. அதற்காகவே அவனைக் காதலிக்க வேண்டும் போலவும் இருந்தது.

சீனியர் மாணவனான தண்டபாணியைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருந்தாள். ஓயாமல் சிகரெட் பிடிப்பானாம். வகுப்பு அறைகளில் கூட சில ஆசிரியர்களை அழ அழவைத்திருக்கிறானாம்.அது ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரியாதலால் அங்கே சில பெண் விரிவுரையாளர்களும் உண்டு. ஒருநாள் புதிதாக வந்திருந்த ஒரு பெண் விரிவுரையாளரின் வகுப்பில் தண்டபாணி சிகரெட் பற்ற வைத்ததாகப் பிரின்ஸிபாலிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அவன் அப்படிச் செய்ததும் உண்மை. ஆனாலும் பிரின்ஸிபால் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்தபோது அந்த வகுப்பின் எல்லா மாணவர்களும் ‘தண்டாபாணி வகுப்பில் சிகரெட்டைக் கையால் தொடக்கூட இல்லை’ என்று உறுதி கூறினார்கள். அவனை விட்டுக் கொடுக்காமல் காப்பதில் சக மானவர்களுக்குள் அவ்வளவு ஒற்றுமை. குற்றச் சாட்டுக்களுக்காக அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு விழாக் கொண்டாடலாமென்றால் இரண்டு பொன் விழாக் கொண்டாடமுடிந்த அவ்வளவு குற்றச்சாட்டுகள் தண்டபாணியின்மேல் இருந்தன. அவன் எதிலாவது எப்போதாவது வகையாக மாட்டிக் கொண்டால் உடனே அவனை ‘டிஸ்மிஸ்’ செய்து காலேஜிலிருந்து வெளியே அனுப்புவதற்குத் தயாராக இருந்தார் பிரின்ஸிபால். கல்லூரியிலேயே தலை சிறந்த பேச்சாளன்; நன்றாகப் பாடுவான்; கல்லூரி ஆண்டு மலரில் அவனுடைய சிறந்த கட்டுரைகளும் கவிதைகளும் நிரம்பியிருக்கும். இருந்தாலும் இத்தனை சாமர்த்தியங்கள் சேர்ந்தும் கல்லூரியில் மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் அவன் காலிப் பயலாகவும் சண்டியாகவுந்தான் பெயரெடுத்திருந்தான்.

வலக்கண் புருவத்தின் மேலே கறுப்புத் திராட்சைக் குலை சரிந்ததுபோல் சரிந்துவிழும் கிராப்பும், அந்த முகமும், அரும்பு மீசையும், ‘எவனாயிருந்தால் எனக்கென்ன? நான்தான் ராஜா’ என்பது போல் சிரிக்கும் அந்தச் சிரிப்பும், ஆட்களை அடிமைப்பட வைக்கிற அந்தக் குரலும் இயற்கையாக வரும் அந்த நகைச்சுவையும் ஞாபகம் வந்து ஞாபகம் வந்து செங்கமலத்தைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தன. இப்படி அவள் தூங்காமல் தவித்துச் கொண்டிருந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார்கள். எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தால் கல்லூரி விடுதிப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தாள்.

“யாரோ உங்க ஹைஸ்கூல் காலத்துத் தோழியாம்! உங்களோட போன்லே பேசணுமாம்”

நா.பா. II - 5