பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

‘உண்மையிலேயே மகாகவி பாரதியார் பெண்களைத்தான் அதாவது . பெண்மையைத்தான் - அதிகம் போற்றிப் புகழ்ந்திருப்பதாக யான் கருதுகிறேன். ஆயினும் இந்தக் கருத்தரங்கத்திலே ஆண்மையைப் போற்றிப் புகழ்ந்திருப்பதாக வாதிட்ட மாணவர்களே மிக நன்றாகப் பேசினார்கள். அவர்களுடைய விவாதத் திறனையும்,பேச்சுத் திறனையும் மதித்து நான் அவர்கள் பக்கமே தீர்ப்பு வழங்குகிறேன் என்று முடித்துவிட்டார்.தலைவர். செங்கமலத்திற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்ப்பதற்கே பிடிக்கவில்லை. எழுந்திருந்து ஒடிப் போய் ஹாஸ்டல் அறையில் கதவைத் தாழிட்டுக் கொண்டு அழுது தீர்க்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அப்படி எல்லாரும் காண எழுந்து ஒட முடியுமா? ஓடினால் சிரிக்க மாட்டார்களா? தோழிகளோடு எழுந்து நடந்தாள் அவள். குனிந்த தலை நிமிராமல் போய்க் கொண்டிருந்தவளை ஓடி வந்து வம்புக்கு இழுத்தான் ஒரு மாணவன்; “ஹார்ட்டி கண்டலன்ஸஸ் மேடம்” என்று செவிகளில் மிக ஏளனமாக வந்து ஒலித்தது அந்தக் குரல். அறைக்குத் திரும்பி வந்ததும் தோழிகள் ஒவ்வொருத்தியாக அவளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினார்கள்.

“என்ன இருந்தாலும் நீ இத்தனை ‘ஸென்ஸிடிவ்’வா இருக்கப்படாதுடீம்மா! இதென்ன தோல்வி? ஏதோ விளையாட்டாகத்தானே விவாதம் செய்தோம்? அந்தத் தண்டம் (தண்டபாணியின் பெயருக்கு மாணவிகள் கண்டுபிடித்திருந்த சுருக்கம் இது) இருக்கிறானே, அவன் ஒருத்தன் பேசினதாலேதான் அந்தக் கட்சி உருப்பட்டது.அவன் மட்டும் இல்லாமற் போயிருந்தால் அத்தனை மாணவர்களும் தலையிலே துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்!”

“ஆனாலும் இது பெரிய அநியாயம்டீ செங்கமலம்! ஏதோ நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு உன்னைக் ‘கொசு செங்கமலம்’ என்று அந்த தண்டம் கூறியதும் அதைக் கேட்டு அத்தனை தடியர்களும் சிரித்துக் கைதட்டி ஆரவாரம் செய்ததும் கொஞ்சங்கூட நன்றாயில்லை.”

தோழிகள் ஒவ்வொருத்தியாக அரற்றிக் கொண்டிருந்தார்கள். கட்சியும் கருத்தும் தோற்பதற்கு முன்பே செங்கமலம் தோற்றுப்போய்விட்ட இரகசியத்தை அங்கு ஒருத்தியும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தண்டபாணியின் அந்தக் கூரிய கண்கள், சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, இப்போது இந்த இடத்துக்கு நான்தான் ராஜா என்பதுபோல் மேடையில் வந்து நின்ற தோற்றம் எல்லாம் செங்கமலத்தின் கண்களுக்குள் இருந்தன. அச்சு மாறாமல் அப்படியே இருந்தன.

அன்று இரவு செங்கமலம் தோழிகளுடன் கல்லூரி உணவு விடுதிக்குச் சாப்பிடப் போகவில்லை. அந்த அறையிலேயே அடைந்து கிடந்து எதையாவது நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு ஹாஸ்டல் பணிப் பெண்ணிடம் சொல்லி ஒரு கிண்ணம்பால் மட்டும் வரவழைத்துப்பருகினாள்.தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளைத் தண்டபாணியின் நினைவு ஆண்டு கொண்டிருந்தது; கொ.சு.செங்கமலம் என்ற கொசு செங்கமலமாமே?