பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91. நினைவின் மறுபுறம்

திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்தக் கூட்ட முடிவில் அங்கு எதிரே சந்தித்தவர்கள் அத்தனை பேரும் அலட்சியமாகப் பார்ப்பதற்குத் தான் ஒருத்தியே பாத்திரமாகி விட்டாற் போல் தோன்றியது அவளுக்கு வாழ்க்கையின் பல்லாயிரம் நுணுக்கங்களை வாய் திறந்து பேசுவது போல் அமைதியாகக் கூர்ந்து நோக்கும் அவனுடைய கண்கள், சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, வலக்கையைத் தாமரைப் பூப் போல மேலே உயர்த்தி ஆள் காட்டி விரலை ஆட்டி ஆட்டிப் பேசும் ஆணித்தரமான பேச்சு, ‘மைக்’கிற்கு முன் சிங்கம் போல் வந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற தோற்றம் எல்லாம் மொத்தமாகச் சேர்ந்து அவளைத் தலை குனியச் செய்துவிட்டன. ஆமாம்! அவன் தலை நிமிர்ந்தபோது அவள் தலை குனிந்தாள்.

“கல்லூரி மன்றத்தின் பாரதி விழாக் கருத்தரங்கத்திலே கவியரசர் பாரதி பெண்மையை மட்டுமே போற்றிப் புகழ்ந்திருப்பதாக இது வரை கீச்சுக் குரலிலே பேச்சும் பாட்டுமாக முழங்கிய எதிர்க் கட்சித் தலைவி தோழியர் செங்கமலம் - அதாவது அவருடைய பெயரின் முதலெழுத்துக்களையும் விட்டுவிடாமற் சொல்வதாக இருந்தால் கொசு. செங்கமலம் என்ற கொசு செங்கமலம்…”

அவ்வளவுதான்! அவனை மேலே பேச விடாமல் ஆடிடோரியத்தில் நிரம்பி வழிந்த மாணவ மாணவிகளின் கூட்டத்தில் கைதட்டலும் சிரிப்பும் அலையலையாகப் பொங்கின. ஹியர்! ஹியர்! என்று மாணவர்களின் உற்சாகக் குரல்கள், சபாஷ் முழக்கங்கள், ‘டேய் தண்டபாணி வெளுத்து வாங்குகிறான் பாருடா!’ என்று அவன் பெயரைச் சொல்லி வியக்கும் பாராட்டுக்கள் எல்லாம் மொத்தமாக எழுந்து அடங்கின. பாரதியார் பெண்மையைப் போற்றிப் புகழ்ந்திருப்பதாக விவாதித்த பெண்களின் கட்சிக்குத் தலைவியாகிய கொ.சு.செங்கமலம் என்ற மாணவியை அடுத்துப் பாரதி ஆண்மையைப் போற்றிப் புகழ்ந்திருப்பதாகப் பேச இருந்த மாணவர்களின் எதிர்க் கட்சிக்குத் தலைவரான தண்டபாணி பேசத் தொடங்கிய போதுதான் இத்தனை அமர்க்களமும் நிகழ்ந்தது. சிரிக்கச் சிரிக்கக் குத்திக் காட்டிப் பேசினான் அவன். தண்டபாணியின் பேச்சைக் கேட்ட பின்பு செங்கமலத்திற்கு நாடி தளர்ந்து விட்டது. அவளுக்குப் பின் அவள் கட்சியில் நின்று விவாதித்த ஒவ்வொரு பெண்ணும் நன்றாக உளறிக் கொட்டினார்கள். முடிவில் இரண்டு கட்சிக்கும் தலைவர்கள் என்ற முறையில் கொ.சு. செங்கமலமும் தண்டபாணியும் தங்கள் கட்சிக் காரர்கள் பேசிய விவாதத்தை எல்லாம் தொகுத்துரைத்து முடிவுரை வழங்கிய பின், தலைமை வகித்த தமிழ்த் துறைத் தலைவர். தா.கா. கரியமாணிக்கனார் தீர்ப்புச் சொன்ன போது செங்கமலத்தின் குனிந்த தலை நிமிராமல் போய் விட்டது.