பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

686 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

லோடு கேலி செய்யத் தொடங்கிவிட்டாள். கடைசியாக அடுத்த முறை நான் உயர்திரு எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்டி, அவர்களைச் சந்தித்தபோது “காரோடு சேர்ந்து தெருவில் மயங்கி விழறதைவிடக் கார் இல்லாமே நடந்து போய்க் கொண்டிருக்கிற போதே மயங்கி விழுந்து விடலாம் போலிருக்கு சார்! செலவு ஆளையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது” என்று அந்தரங்கமாகவும் மனப்பூர்வமாகவும் வருத்தப்பட்டார் அவர்.அதோடு4500ரூ.விலைக்குவாங்கிய அந்தப் பழைய கார் கடந்த சில மாதங்களில் ரிப்பேர் செலவு வகையறாக்களில் சுமார் 5000 ரூ சாப்பிட்டுவிட்டதாகவும் சொல்லி அழுதார். அவருடைய முகம் கவலையினால் வாடியிருந்தது. பேச்சிலும் மலர்ச்சியில்லை. தாம் வாங்கிவிட்ட பழைய காரினால் தமக்கு உண்டாகியிருந்த கஷ்டங்களுக்கு இந்தப் பாழாய்ப் போன உலகம் முழுவதுமே பொறுப்பாளி என்பதுபோல் அவர் உலகத்தை வெறுப்போடு பார்ப்பதாக எனக்குத் தோன்றியது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பழைய காரினால் தாம் படும் அவஸ்தைகளையே அரற்றிக் கொண்டிருந்ததனால் சிறிது காலம் புரொபஸர் எத்திராஜுலுவைச் சந்திக்காமலே அவர் பார்வையில் படுவதிலிருந்தே தப்பித்துக் கொண்டு வந்தேன் நான்.

மீண்டும் நான் 1962ம் வருடம் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி பாரத நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த புண்ணிய தினத்தன்று உயர்திரு. டாக்டர் எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்.டி. அவர்களைச் சந்தித்தபோது,

“சார் ஒரு குட் நியூஸ்... நம்ம காரை... நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்!” அந்தக் காரினால் அவர் அதிகம் சிரமப்பட்ட பின்பு அதை ஒரு பொதுவுடைமையாக்கி-நம்ம கார் என்றே எல்லாரிடமும் சொல்லத் தொடங்கியிருந்தார். “ஒரு சினிமாப்படத் தயாரிப்பாளர் தம்முடைய படம் ஒன்றில் மலையுச்சியிலிருந்து கார் ஒன்று கீழே கவிழ்கிற காட்சியைத் தத்ரூபமாக எடுப்பதற்காக நம்ம காரை 9500 ரூ கொடுத்து வாங்கிக் கொண்டு போய்க் கவிழ்த்துவிட்டார்” என்று முகமலர்ச்சியோடு தெரிவித்தார்.

“சபாஷ் பேஷான காரியம் செய்தீர்கள்” என்று நான் அவரைப் பாராட்டினேன்.

“ஆமாம் சார் இந்தச் சுதந்திரதினத்தைப் போல் நான் பரிபூரணமான மகிழ்ச்சியை அடைந்த சுதந்திரதினம் வேறொன்று இருக்க முடியாது. பாரத நாட்டுக்கு அந்நியர்களிடமிருந்து விடுதலை கிடைத்ததைவிட இந்தப் பழைய காரிடமிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது பெரிய காரியம் என் கையை விட்டுப் போகிறதற்கு முன் இந்தக் கார் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிற விஷயங்கள் ஏராளம் சார்”!

“டிரைவிங் ஒன்றைத் தவிர” - என்று ஞாபகமாகக் குறுக்கிட்டு அவருடைய வாக்கியத்தைத் திருத்தினேன் நான். (அமுதசுரபி, ஜூன், 1963)