பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/நினைவின் மறுபுறம் 🞸 695

திரும்பிப் போய்ப் பிரின்ஸிபாலைச் சந்தித்துத் தானே தன்னுடைய புகாரையும் அந்தக் கவிதையையும் வாபஸ் வாங்கிக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று நினைத்து, "அப்படிச் செய்வதும் இனிமேல் சாத்தியமில்லையே” என ஆற்றாமையோடு மனம் புழுங்கினாள் அவள்.“எப்படியும் அவன் தப்பித்துக் கொள்வான் அல்லது யாராவது ஒரு மாணவன் பழியைத் தான் ஏற்றுக் கொண்டு அவனைத் தப்பச் செய்து விடுவான்” என்று வந்திருந்த தோழி உறுதியாகச் சொன்னாள்.

மூன்று மணிக்கு விசாரணையின்போது பிரின்ஸிபால் அவளையும் கூப்பிட்டனுப்பிவிட்டார்.பிரின்ஸிபால் அறை வாசலில் கல்லூரி மாணவ மாணவிகள் திருவிழாக் கூட்டம் போல் கூடிவிட்டார்கள்.

உள்ளே பிரின்ஸிபால், வைஸ் பிரின்ஸிபால், தண்டபாணி, செங்கமலம்-நான்கு பேருமே இருந்தனர். பிரின்ஸிபாலின் மேஜைமேல் முத்து முத்தாக இண்டியன் இங்கி’ல் எழுதிச் சட்டம் போட்ட அந்தக் கவிதையும் இருந்தது. செங்கமலம் அதற்கு மிக அருகில் அதைப் படிக்க முடிந்த தொலைவில் தான் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. இன்னொரு பக்கம், வைஸ் பிரின்ஸிபாலின் மேஜைக்கு நேரே குற்றவாளியாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்த தண்டபாணியோ, ஸ்லாக் ஷர்ட்டின் காலரைக் கடித்தபடி குறும்புச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்தால் குற்றவாளி நிற்கிற மாதிரி பாவனையே இல்லை. மத்தியானம் இடைவேளையின்போதுதான் புதிதாக மாற்றிக் கொண்டு வந்த மாதிரி புதுப் பாண்ட், புது ஸ்லாக், அலை அலையாக வகிடெடுத்து வாரிய கிராப். சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, ராஜா நிற்பது போல் கம்பீரம் - எல்லாம் வழக்கம் போலவே இருந்தன. பிரின்ஸிபாலும் வைஸ் பிரின்ஸிபாலுந்தாம் அவனுக்கு முன்னால் குற்றவாளிகள் உட்கார்ந்திருப்பதுபோல் பயந்துபோய் உட்கார்ந்திருந்தனர். அவன் நின்ற நிலை செங்கமலத்துக்கும் பெருமையாயிருந்தது. ராஜா! நீங்கள் எப்படியும் தப்பித்துக் கொண்டு விடுவீர்கள்’ என்று அப்போது அவனை நினைத்துத்தான் கண் கலங்கிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் அவள் அவனை நினைத்துக் கண் கலங்குகிறாள் என்பது அங்கே யாருக்குப் புரியப் போகிறது?

விசாரணை ஆரம்பமாயிற்று. பிரின்ஸிபாலின் இடிமுழக்கக் குரலின் ஒலி கணிரென்று ஒலிக்க ஆரம்பித்தது. "மிஸ்டர் தண்டபாணி!”

“யெஸ் ஸார்.”

“நான் கேட்கப் போகிற கேள்விக்குப்பதில் சொல்.”

“சரி ஸார். சொல்கிறேன்.”

“இந்தக் கவிதையை நீயே எழுதிச் சட்டம் போட்டுச் செங்கமலத்திடம் இன்று காலை நீ நேரில் கொடுத்தாய் அல்லவா?”

“சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நானே எழுதி நானே கடைக்குப் போய் நானே பக்கத்திலிருந்து சட்டம் போட்டுக் கட்டிக் கொண்டு வந்து இவளிடம் கொடுத்தேன் ஸார். அப்புறம்”