பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

696 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

அவன் பதிலைக் கேட்டுச் செங்கமலம் அப்படியே அயர்ந்து போனாள்! அவளுக்குத் தலை சுற்றியது. அவள் நினைத்ததற்கு நேர்மாறாக எல்லாம் முடிந்துவிட்டது.

“ஆல் ரைட்! நீங்கள் ரெண்டு பேரும் போகலாம்.”

எல்லாம் சுருக்கமாக முடிந்துவிட்டது. தண்டபாணி சிரித்துக் கொண்டே போய்விட்டான்.

மறுநாள் தண்டபாணியை ‘டிஸ்மிஸ்’ செய்துவிட்டதாகக் காலேஜ் விளம்பரப் பலகையில் அறிக்கை தொங்கியது. செங்கமலம் அன்று கல்லூரி வகுப்புக்கே போகவில்லை. காலையிலிருந்து ஒரே தலைவலியும் ஜூரமுமாகப் படுத்திருந்தாள்.

பகல் பன்னிரண்டரை மணிக்கு விடுதிப் பணிப்பெண் வந்து, “நேற்று இராத்திரி கூப்பிட்டார்களே, அதே ஹைஸ்கூல் தோழி உங்களோடு பேச வேண்டுமென்று டெலிபோனிலே கூப்பிடுகிறார்கள் அம்மா. உங்களுக்கு உடம்பு சரியில்லையென்று சொல்லிவிடட்டுமா? நீங்களே வந்து பேசப்போகிறீர்களா?” என்று கேட்டாள்.

செங்கமலம் போர்வையை உதறிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து ஓடினாள்.

“செங்கமலம் பேசுகிறேன்.”

“கருமேகக் காட்டினிலே... நீ ஒர் கனக மின்னலடீ...” என்று எதிர்ப்புறத்திலிருந்து பாட்டுக் கேட்டது.

செங்கமலம் டெலிபோனில் அழுதே விட்டாள்; "நீங்கள் அதை ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது. அதில்தான் உங்கள் கையெழுத்தே இல்லையே! நான்தான் ஏதோ ஆத்திரத்தில் புத்தி கெட்டுப்போய் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டேனென்றால் நீங்களுமா அப்படி உண்மையைச் சொல்ல வேணும்?”

“பொய் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் செங்கமலம். ஆனால் அந்தப் பாழாய்ப் போன காலேஜிலே ஐயா ஒருத்தரைத் தவிர வேறே எந்த முட்டாளுக்கும் அத்தனை அழகாகக் கவிதை எழுதத் தெரியாதே, நீ என்ன நினைக்கிறே?”

செங்கமலம் டெலிபோனைக் கீழே வைத்தபோது அவள் கண்களிலிருந்து மளமளவென்று நீர் பெருகியது. எதற்காக அவனை வெறுக்க வேண்டுமென்று தோன்றியதோ, அதற்காகவே அவனைக் காதலிக்க வேண்டும் போலவும் தோன்றியது அவளுக்கு. ஆனால் இனிமேல் அப்படித் தோன்றித்தான் என்ன பிரயோசனம்? (கலைமகள், தீபாவளி மலர், 1963)