பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

670 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

இப்பிடி நீரும் நானும். பார்க்கற உலகத்திலே யாருக்கு சுவாமி இருக்கு? வேணும்னே... ‘ஸெக்ஸ் அப்பிலு’காகத்தானே. இதெல்லாம் பண்றான்?

“கசங்காத மொட்டு, மஞ்சத்திலே ஒரு சிங்காரி, கணவனின் காதலி, மனைவியின் காதலன் என்றெல்லாம் பெயர் வைத்துப் புத்தகங்கள் போட்டு விற்கறா. இப்படியே போயிட்டிருந்துதோ, பிஞ்சு மனசுகள்... பாழாய்ப் போயிடும்...”

இப்படியெல்லாம் பேசுவதையோ, குறைப்பட்டுக் கொள்வதையோ, கேட்டு அறவிளக்கு ஆசிரியர் ஆசிரியர் நாதன் அவர்களை ‘ஒழுக்கச் சீலர்’ என்றோ, கடுமையான ‘டிஸிப்ளினேரியன்’ என்றோ தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது. 'யார் யாருக்கு எது எது பற்றாக்குறையோ அதைப் பற்றி மிகவும் வற்புறுத்திப் பேசிக் கொண்டிருப்பார்கள்’ என்பது போலத் தம் சொந்தப் பலவீனத்தை மறைத்துக் கொள்ளவும்கூட அவர் இப்படி வாய் ஒயாமல் அரற்றிக் கொண்டிருக்கலாம். இந்த நாட்டின் எல்லா முதலாளித்துவப் பத்திரிகைகளையும் போல் அறவிளக்கும் ‘புராக்ரஸி’ (அதிகார வர்க்கத்தின்) ஆட்சியில் சிக்கிக் கொண்டிருந்த ஒர் இரண்டுங்கெட்டான் பத்திரிகைதான். அந்தப் பத்திரிகையின் முதலாளிக்கு எத்தனையோ கம்பெனிகள். ஒர் உரத் தயாரிப்புக் கம்பெனி, இரண்டு பஞ்சாலைகள், ஒரு சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை இவ்வளவோடு தர்மத்தையும் காப்பதற்காக, அவர் ‘அறவிளக்கை’ நடத்திக் கொண்டிருந்தார். அந்த முதலாளியின் தொழில் நிறுவனங்களில் அவர் மானேஜிங் டைரக்டர். அவருடைய மச்சினன் ஒரு டைரக்டர், தம்பி எக்ஸிகியூடிவ் டைரக்டர், மாப்பிள்ளை ஒரு டைரக்டர், கடைசியாக அவருடைய அத்தை பிள்ளை ஒரு டைரக்டர். பத்திரிகை நிர்வாகமும் அதேமாதிரித் தான் நடைபெற்றுவந்தது.சிவகாமிநாதன் அதற்கு நிர்வாக ஆசிரியர்.முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடாமல் ‘அறவிளக்கை’ ஒட்டிக் கொண்டு போகிற தந்திரம் அவர் ஒருவருக்குத்தான் தெரிந்திருந்தது என்பதாலோ, அல்லது யாராவது செய்ய வேண்டிய காரியத்தை அவர்தான் செய்து தொலைக்கட்டுமே என்ற அலட்சிய மனப்பான்மையினாலோ பத்திரிகையை அவரிடம் விட்டிருந்தார்கள். ‘குடும்பப் பத்திரிகை’ என்று அதன் கண்ணியத்தையும், கெளரவத்தையும் நிலைநாட்டுவதற்காகச் சிவகாமிநாதன் அதைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டு வந்த பெயரை உள்ளுர்க் ‘கிரிடிக்’குகளும், குறும்பர்களுமாகிய சிலர் மச்சினன், மாப்பிள்ளை, தம்பி, ஆகிய குடும்ப உறுப்பினர்களே நிர்வாகம் செய்யும் பத்திரிகை என்று விநோத வியாக்கியானம் செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ‘சிவகாமிநாதன்’ ஒரு மாதிரி மனிதர். ‘ஸ்நாபெரி’ (தன்னைத்தானே பகட்டாக உயர்த்திப் பேசிக் கொள்ளுதல்) என்பார்களே, அந்தக் குணம் அல்லது குற்றம் அவரிடம் உண்டு. தம்மைச் சமூகமும் மற்றவர்களும் நிஜமாகவே ஒரு கெளரவமான மனிதனாகவோ, ஆஸ்திகனாகவோ, கர்மசீலனாகவோ, மதிக்கிறார்களோ, இல்லையோ என்ற பயத்தின் காரணாகவே அவர் இப்படிப் பேசிக் கொண்டு நான் ஒரு கெளரவமான மனிதன்தான் என்பதை நிரூபித்துக் கொள்ள முயல்கிறாரோ என்று எனக்குள் ஒரு சந்தேகம் உண்டு. ஒருநாள் இந்த சிவகாமிநாதனுக்கும், எனக்கும் ‘ஆபாசம் என்பது என்ன?’ என்ற கேள்வியை மையமாக வைத்துக் காரசாரமானதொரு விவாதம் எழுந்தது.