பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/‘ஸெக்ஸ் அப்பீல்’ 🞸 699

“எந்த உணர்ச்சியாயிருந்தாலும் சரி, அந்த உணர்ச்சியைப் பற்றிப் பரிபூரணமாகச் சொல்லவோ எழுதவோ தெரியாமல் அரைகுறையாகச் சொல்வதுதான் ஆபாசம். பரிபூரணமான ‘காதல்’ என்பது இலக்கிய குணம். அதைப் பரிபூரணமாகச் சொல்லத் தெரியாததுதான் ஆபாசம். நிச்சயமாக ஆபாசமாயிருப்பது எதுவோ அதில் அழகு இருக்க முடியாது. அதைப் போலவே நிச்சயமாக அழகாயில்லாதது எதுவோ அது ஆபாசமாகத்தானிருக்க முடியும். பெண்ணின் படத்தை வரைந்தால் அழகிய மார்புகளையும் சேர்த்துதான் வரைய முடியும் பெண்ணுக்கு அழகு இருப்பதுதான் இலட்சணம்.அழகில்லாததுதான் ஆபாசம். பெண்ணின் படத்தை அழகாக வரைவதே ஆபாசம் என்று ‘அறவிளக்கு’ பத்திரிகை ஆசிரியராகிய நீங்கள் நினைக்கிறீர்கள்! ஒர் அழகிய பெண்ணின் படத்தை அழகாகவும், எடுப்பாகவும், வரையாமலிருந்தால்தான் ஆபாசமென்று நான் வாதிடுகிறேன்.”

“நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் எல்லாப் பத்திரிகைகளையும் நிர்வாணப் பத்திரிகைகளாக மாற்றினால்தான் அழகு என்று ஆகும்!” .

இப்படி உடனே என் மேல் சீறினார் சிவகாமிநாதன். நானும் அவரைச் கம்மாவிடவில்லை.

“அப்படியில்லை மிஸ்டர் சிவகாமிநாதன்! ‘செக்ஸ் அப்பீல்’ என்கிற அம்சத்தை உங்களைவிட அதிகமாக வெறுக்கிறவன் நான். படத்தின் போலி அழகையும், நியாயத்தை மீறிய கவர்ச்சியையும் சாதனங்களாக ஆக்கிக் கொண்டு சிந்தனை இயக்கமாகிய பத்திரிகைகள் விற்பனைக்குப் போட்டியிடுவது எனக்கும் பிடிக்கவில்லை. ஒரு நோக்கமும் இல்லாமே ஒரு பெண் ஒர் ஆணைப் பலவீனப்படுத்துகிற கோணத்தில் தன் அழகை ஆபாசமாகக் காண்பித்துக் கொண்டிருக்கிறாற்போல் படம் வரைவதை விபச்சாரத்தைக் காட்டிலும் மட்டான தொழிலாக நான் நினைக்கிறேன். நிறைய விற்கிற எல்லாப் பத்திரிகைகளுமே இந்தக் காரியத்தை ஒரளவு செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அழகிற்கும் ஆபாசத்திற்கும் உள்ள நுணுக்கமான வித்தியாசமே கடிகாரத்தில் சிறிய முள் ஒடுவதற்கும் பெரிய முள் ஒடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்! நிதானத்தை மீறினால் ஆபாசம்! அதுவே நிதானத்தோடு தான் நிற்கிற எல்லையிலே நின்றால் அழகு. உலகில் அழகு ஆபாசம் என்ற முரண்பட்ட விளைவுகள் இரண்டிற்கும் ஒரே விதமான பொருள்கள்தான் பெரும்பாலும் காரணமாயிருக்கின்றன. அழகின் எல்லையில்தான் ஆபாசம் தொடங்க இருக்கிறது. அழகு எல்லை மீறினால்தான் ஆபாசம். காதல் தன்மை அமையாத முழுமையாக அமையாத ஒரு காதல் கதையுங்கூட ஆபாசம்தான். பக்தித்தன்மை முழுதும் அமையாத அரைகுறை பக்தியும் ஆபாசம்தான் ‘காதல்’ என்ற உணர்வைப் பற்றி எழுதுவதே மட்டமென்று நீங்கள் கருதுவதாயிருந்தால் காளிதாஸ்னிலிருந்து பாரதியார் வரை காதலைப் பற்றி எழுதியிருப்பவர்கள் எல்லாம் ஆபாசமாகத்தான் எழுதியிருக்கிறார்கள் என்று கொள்கிறீர்கள் ‘ஸெக்ஸ்’ ஒன்று மட்டுமே ஆபாசமில்லை. ஸெக்ஸ் அப்பீல்தான் ஆபாசம். ஆபாசங்கள் எத்தனையோ விதத்தில் பெருகியிருக்கின்றன!