பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

700 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

உங்களுடைய ‘அறவிளக்கு’ பத்திரிகையில் ஒரு பரம பக்தர் பாகவதபுராணத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறாரே, அந்தப் பக்திக் கட்டுரைத் தொடரில் போன வாரம் கிருஷ்ணன் ஜல க்ரீடை செய்ததைப் பற்றி எழுதுகிற இடத்தில் கோபிகாஸ்திரிகளுடைய தனபாரங்கள் பருத்த செவ்விள நீர்க் காய்களைப் போலிருந்ததாகவும், அவற்றின் நுனியில் பவழ மொட்டுக்களைப் போல் காம்புகள் இருந்ததாகவும் அரைப் பக்கத்துக்கு மேல் அந்த விஷயத்தையே வருணித்துத் தள்ளியிருக்கிறார். வருணிப்பதைத் தவறென்று சொல்லவில்லை. அழகாகவும், நயமாகவும் வருணிக்கத் தெரியாததால் கொச்சையாக, நடுவார்ந்தரமாக வருணித்து, அந்த வருணைனையோ ஆபாசமாகப் பண்ணியிருக்கிறார். அது ‘ஸெக்ஸ் அப்பில்’ இல்லையா?

“பகவத் விஷயம்! அதைப் பற்றி எல்லாம் குறை சொல்லி இப்படி நீங்கள் நாஸ்திகவாதம் பேசினால் என்ன பண்ணுகிறது?”

“இருக்கலாம்! ஆனால் பகவத் விஷயத்தை நயமாக எடுத்துச் சொல்வதற்கும் ஒரு மனப்பக்குவம் வேண்டும். உங்கள் பத்திரிகையில் ‘பகவத் விஷயம்’ எழுதுகிறவருக்கு அது இல்லை.”

“ஆனால் நாங்க கண்டபடி ஆபாசமாகப் படமே போடறதில்லை. கெளரவமான படங்களாகத்தான் போடுறோம்.”

“நிச்சயமாக இல்லை! நீங்கள்தான் ஆபாசமாகப் படம் போடுவதில் முன் நிற்கிறீர்கள்! மற்றவர்கள் ஆபாசமாகப் படம் போடுவதாகச் சொல்லிக் கொண்டே அப்படிப் போடுகிறார்கள்! நீங்களோ கெளரவமாகப் படம் போடுவதாகச் சொல்லிக் கொண்டே ஆபாசமாகப் படம் போடுகிறீர்கள்! உங்கள் பத்திரிகையில் படமாக வருகிற பெண்கள் எல்லாம் ‘பெண்கள்’ என்று சுட்டிக் காட்டப்படுவதற்குரிய முக்கியமான அடையாளங்கள்கூட இல்லாமல் பேடிகளைப் போல் காட்சியளிக்கிறார்கள். இதுதான் நிஜமான ஆபாசம் என்று நான் சொல்லுகிறேன். உங்களைப் போல் பெண்களையும், அழகையும், காதலையும், வெறுக்கிற பத்திரிகைகளும்கூட ஆபாசம்தான்! பெண்களின் மார்பைப் பெரிதாகப் போடுவதனாலும் அசட்டுக் காதல் கதைகளை மட்டுமே அரைகுறையாக எழுதுவதனாலும், விற்பனையைப் பெருக்கிக் கொள்கிற பத்திரிகைகள் எவ்வளவு அதிக ஆபாசமாக நடக்கின்றனவோ அதே அளவு ஆபாசத்தோடுதான் வேறொரு விதத்தில் அசிங்கமாகி மாறுபட்டு நிற்கிறீர்கள் நீங்கள்! ‘அழகு’ என்ற எல்லைப் புள்ளியின் ஒருபுறம் நீங்களும், மற்றொருபுறம் அவர்களுமாக அதை நெருங்க முடியாமல் விலகி நிற்கிறீர்கள் என்றுதான் நான் சொல்வேன். உங்களைவிடப் படமே போடாமல் விஷயங்களை மட்டும் வெளியிடுகிற பத்திரிகைகள் எவ்வளவோ தேவலை, அவற்றில் நிச்சயமாக எந்த ஆபாசமும் கிடையாது. இயற்கையில் அழகாக இருக்கிற ஒரு பெண் அழகாகத் தோன்றுவது ஆபாசமில்லை. அழகில்லாத ஒரு பெண் தன்னைப் பெரிய அழகியாக நிரூபித்துக் கொள்ள முயன்று பகட்டுவது தான் ஆபாசம். இனஅழகு தவறில்லை! இனக் கவர்ச்சிக்கு முயல்வதுதான் தவறு!” என்று அடித்து கூறினேன் நான்.