பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/‘ஸெக்ஸ் அப்பீல்’ 🞸 701

“குடும்பப் பெண்களும், இளம் பிள்ளைகளும் குட்டிச்சுவராய்ப் போகத்தான் நீங்கள் இந்த வழி சொல்லுகிறீர்கள்.”

“ஒய்! பிதற்றாதீர்! நீர் சொல்லுகிற அந்த உயர்குடும்பத்துப் பெண்கள்தான் சுவாமி இத்தனை ஆபாசமான தோற்றங்களையும், அசிங்கமான அலங்கார முறைகளையும் கண்டுபிடித்து வளர்த்துப் பத்திரிகைப் படங்கள் வரைக்கும் ‘ஃபேஷன்’களாக அவற்றை அனுப்பியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அவர்களுடைய மானத்தைக் காப்பாத்தறத்துக்காகத்தான் நீர் மார்பில்லாத பேடிப் பெண்ணையும், மயக்கும் தன்மையில்லாத மங்கை நல்லாரையும் படமாக வரைவதாகப் பெருமைப்பட்டிருக்கிறீர்! கூலிக்காரக் குப்பனுடைய மனைவியும் சம்மட்டி அடிக்கிற சன்னாசியின் மகளும் அழகாயிருந்தால்கூட அப்படித் தாங்கள் அழகாயிருக்கிறோம் என்கிற உண்மையையே மறந்து அதை நிரூபிக்கவும் ஆசைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உம்முடைய மைலாப்பூர், மாம்பலம் அழகிகளும், அம்மாமிகளுமோ? பிரேஸியர்ஸ். ஃபோம் ரப்பர் திணித்த ப்ரேஸியர்ஸ் என்று விதம் விதமாக வாங்கிக் கட்டிக்கறதும், நாளுக்கொரு ‘ஹேர் ஸ்டைல்’ மாத்திக் கொண்டை போட்டுக்கறதுமாகத் தங்கள் அழகை - அல்ல - ஆபாசத்தை நிரூபித்துக் கொள்ள நாளும் முயலுகிறார்கள். நீர் என்னடான்னா, அவாளோட கெளரவத்தைக் காப்பாத்தறதாகச் சொல்லிக்கிறீர்! உம்ம அறவிளக்கிலே வருகிற பெண்களின் படத்தைப் பார்த்துக் கெட்டுப் போகாதவாள் எல்லாம்கூட அதைப் படித்துக் கொண்டிருக்கிற உயர் குடும்பப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்து நிச்சயமாகக் கெட்டுப் போக முடியுமே ஐயா?”

“... என்னமோ ஸார்! உங்க வாதமே புதுமையாயிருக்கு. நான் என்ன பதில் சொல்றதுன்னே நேக்குப் புரியலே...”

“ஏன் புரியப் போகிறது? ஆண்மையும் ஒரு கம்பீரமான குணம் பெண்மையும் ஒரு கம்பீரமான குணம். பேடிமை - அலித்தன்மை இருக்கே... அது குணத்திலேயே அடங்காத பிறவி ஆபாசம்! நீர் பத்திரிகை நடத்துகிற இலட்சணமும் அப்படித்தான் இருக்கு!”

இதைக் கேட்டுச் சிவகாமிநாதன் அவர்களுக்கு என்மேல் அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. என்னைக் ‘கன்னாபின்னா’ என்று வாயில் வந்தபடி திட்டிவிட்டுப் போய்விட்டார். இது நடந்து ஒரு வாரத்துக்குப் பின் - மைலாப்பூரிலே எங்கே ஒரு மூலையில் ஏதோ ஒரு மாதர் சங்கத்திலே ஆண்டு விழா ஒன்று நடந்தது. அந்த விழாவில் உயர்திரு சிவகாமிநாதன்-ஆசிரியர்-அறவிளக்கு தலைமையில் நான் சொற்பொழிவாற்றினேன். லிப்ஸ்டிக் பூச்சு, அஜந்தா, குதிரைவால் ஹேர்ஸ்டைல்கள், சொந்தமாகவே செழித்த மார்புகள், ஃபோம் ரப்பர் திணித்த ஃப்ரேஸியர்ஸ்களால் நிமிர்ந்த கச்சுக்கள் - என்று தங்கள் அழகை நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் ஆபாசமாகத் தோன்றிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான உயர் குடும்பத்துப் பெண்களுக்கு முன்னே இந்த ஆண்டு விழாக் கூட்டத்தில் பெண்மையின் சிறப்பைப் பற்றியும், புனிதத்தன்மையைப் பற்றியும் வேத வேதாந்த உபநிஷத மேற்கோள்களுடன்