பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

702 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

ஒரு மணிநேரம் தலைமையுரை கூறியருளினார் திரு.சிவகாமிநாதன். நான் அரைமணி நேரம் ஏதோ பேசினேன். பேசிவிட்டு உட்கார்ந்ததும் என் அருகே தலைவராக வீற்றிருந்த சிவகாமிநாதனிடம், “இந்தக் கூட்டத்திலே இருக்கிற நாலு பெண்களைப் பார்த்துக்கெட்டுப்போவதைவிட எந்த விதத்திலும் அதிகமாகக் கெட்டுப் போவதற்கு ஜனரஞ்சமாக ஒரு தமிழ்ப் பத்திரிகையில் வருகிற படங்கள் தூண்டிவிட முடியாது” என்று கூறினேன் நான். அவர் கோபத்தினால் எனக்குப் பதிலே சொல்லவில்லை. மேடைக்கு நேரே எதிர்நாற்காலியில்-கீழே முதல் வரிசையில் ‘ஸெக்ஸ் அப்பீல்’ என்ற பதத் தொடர்ச்சிக்கே நிரூபணம் போல் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண் தன்னைச் செயற்கையாக அலங்கரித்துக் கொண்டு எடுப்பாகவும் திமிராகவும் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்து எரிச்சலோடு நான் மீண்டும் சிவகாமிநாதன் அவர்களின் காதருகே சென்று, “அதோ அந்த அம்மாளைப் பார்த்தீரா? பேரன் பேத்தி எடுத்துப் பாட்டியான பிறகும் என்ன திமிரான அலங்காரம் ஐயா? ‘ஸெக்ஸ் அப்பீலுக்கு’ இதைவிட வேறே ஃபெர்ஸானிபிகேஷன் (உருவகம்) வேண்டவே வேண்டாம்.” என்றதும் அவர் முகம் பேதிக்குச் சாப்பிட்ட மாதிரி ஆகிவிட்டது. “இரைந்து பேசாதீர்! அவள்தான் என்னுடைய சம்சாரம்” - என்று வெட்கத்தோடு சிவகாமிநாதன் எனக்குப் பதில் கூறியதும்...

"ஐ ஆம் வெரி. ஸாரி. எக்ஸ்க்யூஸ். மீ..” என்று அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவுமே சொல்ல முடியவில்லை.நான் அடைந்த திகைப்பு அவ்வளவு இவ்வளவு இல்லை.

அழகைக்கூட ஆபாசம் என்று வெறுக்கிற 'ஸினிக்'குகளில் ஒருவராக அவர் ஏன் ஆனார் என்ற மர்மம் அவருடைய தர்மபத்தினியைப் பார்த்ததுமே இன்று எனக்குப் புரிந்துவிட்டது! ஐயோ பாவம், சிவகாமிநாதன்!

(தாமரை, நவம்பர், 1963)