பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

704 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

என்று வடமொழிப் பெயரை வைப்பதாவது? அஃது அறமன்று ஒழுங்கன்று!” என்று திருவேங்கடம் தனித்தமிழ் உணர்வோடு மறுத்தான். அவன் முகம் சினத்தால், சிவந்துவிட்டது.

“நெருப்பு என்று பத்திரிகைக்குப் பேர்வைப்பதைவிடப்பத்திரிகையிலேயே அதை அள்ளி வைத்துவிடலாமே!” என்று அதைக் கிண்டல் செய்தான் பராங்குசம்.

“இந்த வம்பெல்லாம் வேண்டாம். நான் சொல்கிறபடி கேள். ‘நீட்டா’ ‘கைலாசம்’னு உன் பெயரையே பத்திரிகைக்கும் வைத்துவிடு. கச்சிதமாக இருக்கும் கைலாசம் - ஆசிரியர் ‘கைலாசம்’னு போட்டுக் கொள்ளலாம்” என்றார் நாராயணசாமி.

“ஐயய்யே, அபசகுனம் மாதிரி இருக்கிறது.கைலாசம் என்றால் சிவனின் இருப்பிடம், சிவனிடம் அழித்தல் தொழில் உண்டு. நம் கைலாசமும் இதற்கு முன் நான்கு ‘டெய்லி’யும் மூன்று ‘வீக்லியும்’, இரண்டு ‘மந்த்லி’யும் தொடங்கி அழித்திருக்கிறான். அதை நினைவுபடுத்துவதுபோல் இருக்கிறது கைலாசம் என்ற பெயர். கைலாசம் என்றாலே சம்ஹாரத் தொழில்தான் நினைவு வருகிறது. அது வேண்டாம்” என்று பராங்குசம் அதற்கு அஸ்துப் பாடினான்.

“யாம் புகல்வேம் கேண்மின் அருவிக்குத் தூய தமிழில் ‘மலைபடுகடாம்’ என்று பெயர். அருவி என்றால் எல்லோருக்கும் புரிந்துவிடும். எனவே புரியாத மாதிரியில் தமது இதழுக்கு மலைபடுகடாம் எனப் பெயர் வைத்திடுக’ என்றார் திருவேங்கடனார்.

“ஐயன்மீர் நமது பத்திரிகையின் பேரைப் புகல்வோர் பல்லுடை படலாகுமோ?” ‘கலைபடுமடாம்’ என்ற பேர் வாயில் நுழையாதே?'

“பிழை பிழை மலைபடுகடாம் என்று சொல்.”

“பேரே மங்கலமாக இருக்க வேண்டும். பழைய பத்திரிகைகளைப் போல் நின்று போகாமல் இதுவாவது தீர்க்காயுசாக நடக்கும்படியான பேரைச் சொல்லுங்கள்.”

"அப்படியானால் ஆவி, உயிர்; சிரஞ்சீவி, ஆயுள்மணி என்கிற மாதிரி ஏதாவது ஒரு பெயரை வைத்துவிடு.”

"ஏய் பராங்குசம், உன்னை உதைத்து விடுவேன். உன் கிண்டல் அத்துமீறிப் போகிறது.”

“பத்திரிகைக்குத் தகுந்த பெயர் ஒன்று என் மனத்தில் இருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாவிட்டால் சொல்கிறேன்” என்று பராங்குசம் ஆரம்பித்தான்.

“கோபமென்ன? கிண்டல் இல்லாமல் சொல்லு”

“அவியல் என்று வைத்துவிடு. நிம்மதியாகப் போய்விடும். உன் சகலவிதமான இலட்சியங்களுக்கும் அலட்சியங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.”

என்ன ஆச்சரியம்! கைலாசம் உதைக்கப் போகிறான் என்று பயந்து கொண்டே இதைக் கூறிய பராங்குசத்துக்கு அவன் சபாஷ் போட்டதும் வியப்பாகிவிட்டது.