பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————

இரண்டாம் தொகுதி / பெயர்ப் பொருத்தம் * 705

“பராங்குசம்! இந்தப் பேர் ஏ ஒன்! நாளைக்கே ‘விளம்பரம்’ கொடுத்து விடுகிறேன்” என்றான் கைலாசம்.

“‘அவியல்’ என்பது நல்ல தமிழ்ச் சொல்லே! விகுதி பெற்ற தொழில் பெயராம். அதனை வைத்திடுதல் பொருத்தமே” என்றார் திருவேங்கடனார். அரசியல் நாராயணசாமிக்கு அந்தப் பெயர் விருப்பமில்லை. ஆனால் மறுத்துச் சொல்லாமல் சும்மா இருந்துவிட்டார்.

“அவியல் சிறந்த வார இதழ். ஆசிரியர் கைலாசம் - இன்றே வாங்கிப் படியுங்கள்” என்று விளம்பரம் கொடுக்கலாமா?” என்று கைலாசம் கேட்டான்.

“சே! சே! வழவழ வென்று அதிக வார்த்தைகளைப் போட்டு விளம்பரத்தைக் கவர்ச்சியற்றதாகச் செய்யாதே. விளம்பரத்திலும் ‘சஸ்பென்ஸ்’ வேண்டும். சுருக்கமாக 'கைலாஷாவின் அவியலை நுகர்ந்து மகிழுங்கள்’ என்று விளம்பரம் கொடு. அதே வார்த்தைகளை மூவர்ணச் சுவரொட்டியாகப் பெரிய அளவில் ஏராளமாக அச்சடித்துச் சினிமாச் சுவரொட்டிபோல் மூலைக்குமுலை ஒட்டச்செய்.முதல் இதழ் பத்தாயிரம் பிரதிகள் போகவில்லையானால் என்னை ஏனென்று கேள்!” என்று கூறினான் பராங்குசம்.

முதல் இதழ் வெளிவருமுன் எல்லாத் தினசரிகளிலும், ‘கைலாஷின் அவியலை நுகர்ந்து மகிழுங்கள்’ என்று கொட்டை எழுத்துக்களில் விளம்பரம் வந்தது. சினிமாச் சுவரொட்டிகளை விடப் பெரிய மூவண்ணச் சுவரொட்டிகளில் ‘கைலாஷின் அவியலை நுகர்ந்து மகிழுங்கள்’ என்று அச்சிட்டு ஒட்டப் பெற்றது. சினிமாவில் அதே விளம்பரம் சிலைடாகக் காட்டப் பெற்றது.

புதுப் பத்திரிகை வெளிவந்தது. பராங்குசத்தின் யோசனைக்கு மேல் அதிகப்படி ஒர் ஐயாயிரம் சேர்த்து பதினையாயிரம் பிரதியாக முதல் இதழ் அச்சிட்டுவிட்டான் கைலாசம் விற்பனையாளர்களுக்குப் பிரதிகள் பறந்தன. எங்கு நோக்கினும், ‘அவியல்’ தொங்கிற்று. மக்கள் நிலையறிய மாறுவேடத்தோடு இரவில் நகர்ப்பரிசோதனைக்குப் போகிற அரசன் மாதிரிப் பத்திரிகை வெளியான அன்று கைலாசம் மாறுவேட மின்றியே பகலிலேயே தன் பத்திரிகையைப் பற்றி அறிவதற்குக் கிளம்பினான்.

பஸ் ஸ்டாண்டு அருகில் ‘அவியல்’ தொங்கின. வெற்றிலை பாக்குக் கடையின் முன்னால் இரண்டுமாணவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.“அவியல் ரொம்பப் பிரமாதம் பிரதர்!” இதைக் கேட்டதும் கைலாசத்துக்குத் தன் பிறவியே சாபல்யமடைந்துவிட்டது போலிருந்தது.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் மளிகைக்கடை வாசலில் இரண்டு கிழவர்கள், “கைலாசம் அவியல் நன்றாகப் போகிறான் அப்பா” என்று பேசிக்கொண்டிருப்பதைக் கைலாசமே கேட்டான்.

‘சே! சே! நம்மைப் பற்றி இவர்களெல்லாம் இத்தனை பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். நாம் தரையில் நடந்து போவதாவது’ என்று ஒரு டாக்சியைக்

நா.பா. II - 6