பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

706 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



கூப்பிட்டு ஏறிக் கொண்டான் கைலாசம். ‘அவியலின் எடிட்டர்’ என்றால் அதற்கு ஒரு ‘ரெஸ்பெக்ட் வேண்டாமா?

ஒரு ‘புக் ஷாப்பில்’ அழகிய இளநங்கை ஒருத்தி அவியலின் அட்டைப்படத்தைப் பார்த்து வியந்து நிற்பதையும் கைலாசம் டாக்ஸியில் போகும்போதே பார்த்தான் அவனுக்குப் பெருமை தாங்கவில்லை.

ஊரெங்கும் 'கைலாஷின் அவியலைப்’ பற்றிய பேச்சு.

ஆனால் என்ன பரிதாபம்! முதல் இதழ் விற்பனைக் கணக்கு முடிந்து பதினாலாயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பது பிரதிகள் திரும்பி வந்துவிட்டன. இருபது பிரதிகள் நண்பர்களுக்குக் ‘காம்ப்ளிமெண்டரி’யாகக் கொடுத்திருந்தான் கைலாசம்.

‘என்ன அநியாயம்! ஊரெல்லாம் ‘அவியலை’ பற்றிப் பிரமாதமாகப் பேசிக் கொள்வதை என் காதாலேயே கேட்டேனே! எப்படி விற்காமல் போயிற்று?’ என்று திகைத்தான் கைலாசம். கோளாறு எங்கே என்று அவனுக்குப் புரியவில்லை. அவ்வளவும் நஷ்டம்! 'கைலாசம்’ என்றாலே அழித்தல் தொழில்தானா? நான் தொடங்கி நின்று போன இதழ்களின் சோக வரலாற்றிலே, அவியலின் புதிய அத்தியாயமும் சேர வேண்டியதுதானா?” என்று கண்கலங்கி வருத்தத்துடன் வீற்றிருந்தான் கைலாசம்.

அப்போது பராங்குசம் வந்து சொன்னான்:"என்னை மன்னித்துவிடு, கைலாசம்! பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஒருத்தன் ‘ஹோட்டல் கைலாஷ்’ என்று வைத்திருக்கிறான். அவன் ஒட்டலில் அவியல் தினசரி போடுகிறான். நீ செய்த விளம்பரப் பயன் அவனுக்குப் போய்விட்டது. அவன் கடையில் கூட்டம் தாங்கவில்லை! ஊரெல்லாம் அவன் கடை அவியலைப் பற்றித்தான் பேச்சு. முடிந்தால் நீ கூடப் போய்ச் சாப்பிட்டு விட்டு வா.நான் போயிருந்தேன் மத்தியானம், அவியல் ஏ ஒன்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்துவிட்டான் பராங்குசம், கைலாசத்திடம் அடிவாங்க அவன் தயாராயில்லை.

(கல்கி, 1964)