பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94. பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில்

ன்றும் கெளரிக்கு ஏமாற்றம்தான்!

“ஒண்ணும் இல்லீங்க அம்மா!” என்று வார்த்தைகளால் சொல்லியதை விளக்குவது போல், இடது கையிலிருந்த கடித அடுக்கை நழுவ விட்டு விடாமல் ஜாக்கிரதையாக வலது கையை மேலே தூக்கி விரல்களை விரித்துக் கிடையாதென்று மறுப்பதற்கு அபிநயமாக ஒரு சுழற்றுச் சுழற்றி அதைச் சைகையாலும் நிரூபித்த பின், ‘இருந்தால் கொடுக்க மாட்டானா?’ என்பது போல் தெரியத் தனக்குத் தானே சிரித்தபடி மேலே நடந்து விட்டார் தபால்கார நாயுடு. நாள் தவறாமல் கடிதங்களை ‘சார்ட்’ செய்யும் போது கெளரி நம்பர் 17, கனகம்மாள் ஸ்டிரீட் என்று விலாசமிட்ட, ஒரு கார்டையோ, கவரையோ, இண்லண்ட் கவரையோ ஆவலோடு எதிர்பார்த்துத் தேடுவது கடந்த சில மாதங்களாக நாயுடுவுக்கு ஒரு வழக்கமாகியிருந்தது. தபால்காரன் என்பவன் பலருடைய கடிதங்களைச் சுமந்து கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அப்படிச் சுமந்து கொண்டு போகிற கடிதங்களில் அவற்றை அடையப் போகிறவர் களின் சுகமும் இருக்கலாம், துக்கமும் இருக்கலாம். அதிர்ச்சியும் இருக்கலாம். ஆனந்தமும் இருக்கலாம்.ஆனால் அவற்றைத் தபால்காரன் சுமப்பதில்லை. என்றாலும், இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்ணுக்குப் பதில் கடிதம் ஒன்றும் கொடுக்காமலே போகிற சுமை நாயுடுவின் மனத்தில் நாளுக்கு நாள் கனத்துக் கொண்டே போயிற்று. ஒவ்வொரு நாளும் சுற்று முடிந்து கடிதங்களைப் பட்டுவாடா செய்தான பின் அவருடைய கைகளின் பாரம் குறைகிற சமயம் மனத்தின் பாரம் அதிகமாகும்படி செய்திருக்கிறாள் இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்.கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட சர்வீஸில் தபால்கார நாயுடு இப்படி யாருக்காகவும் மனமிரங்கி உருகியதும், தவித்ததுமில்லை.

“நாங்க குங்குமம் சொமக்கிற கழுதைம்பாங்களே; அது மாதிரிங்க கொண்டு போய்க் கொடுக்கிற கடுதாசிலே நல்லதோ, கெட்டதோ, சுகமோ, துக்கமோ எது வேணுமானா இருக்கலாம். அதுனாலே நாங்க பாதிக்கப்படறதில்லே” என்று நாயுடு, சில சமயங்களில் விலாசதாரர்களிடம் வேதாந்தபரமாகப் பேசுவதும் உண்டு. அப்படிப் பேசும் போது ஏதோ கை நிறையச் சுகதுக்கங்களை அல்லது இன்ப துன்பவங்களை அடுக்கிக் கொண்டு போய் அவரவர்களுக்குச் சேர வேண்டியதை அவர்களுடைய விலாசம் தவறாமல் உதறி விட்டுப் பாரத்தைக் குறைத்துக் கொள்ளும் விதியின் நடுநிலைமை பிறழாததொரு நாயகனைப் போல் அவருடைய குரல் ஒலிக்கும். தபால்காரன் வருகின்ற நேரத்தை எதிர்பார்த்து அந்த நேரத்தை நம்பும் ஆவலிலேயே மற்ற நேரத்தையெல்லாம் போக்கி விட்டு நிற்கும் அசடுகளை அவர் நிறையப்