பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில் ★ 709



கிணற்றில் கல் போட்ட மாதிரி இருக்கிறது. தபால்காரர் நாயுடுவுக்குக் குருமூர்த்தியை அதிகம் தெரியாதென்றாலும் ஒரளவுக்குத் தெரியும். வருகிற தபால்களிலிருந்து மனிதர்களை ஒரளவுக்குக் கணித்து வைத்திருந்தார் நாயுடு. இந்தக் குருமூர்த்திக்குச் சாமியார்கள், பண்டாரங்கள், சோதிடர்கள் ஆகியவர்கள் மேல் பித்தும்,அபிமானமும் அளவுக்கதிகமாய் உண்டு. ஆண்டி மலை ஸ்வாமிகளிடமிருந்து அவனுக்கு வாரா வாரம் தபாலில் விபூதியோ ஏதேனும் ஒர் இரட்சைக் கயிறோ வரும். இருந்தாற் போலிருந்து திடீரென்று, குருமூர்த்தி இரண்டு மூன்று நாள் ஊரில் தென்படமாட்டான். மூன்றாம் நாள் திரும்பி வந்தபின் ‘ஆண்டிமலைக்குப் போய்ச் சுவாமியைத் தரிசனம் பண்ணிவிட்டு வந்தேன் அண்ணா! அப்புறம்தான் மனசு நிம்மதியாச்சு! பேசிண்டே இருந்தப்ப சுவாமி ஒரு பிடிமண்ணை அள்ளி என் கையிலே போட்டார். அது சந்தனமா வந்து விழுந்தது’ என்று யாரிடமாவது பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். மனிதனை அவன் வாழ்ந்து கொண்டிருக்கிற அசல் சுகதுக்கங்கள் நிறைந்த மண்ணின் மேலும், சுற்றியிருப்பவர்கள் மேலும் நம்பிக்கையில்லாமல் பண்ணி விடுகிற எந்தச் சாமியாரையும் நாயுடுவுக்குப் பிடிக்காது. ஆனாலும் குருமூர்த்தியின் மேல் மட்டும் அவருக்கு ஏதோ ஒர் அபிமானம் உண்டு. ‘வம்புதும்புக்குப் போகாதவன்-நாணயமான பையன்’ என்கிற அபிமானம்தான் அது. எனவே ஊரில் பலர் நம்பியது போல் கிருஷ்ணபவான் கல்லாப் பெட்டியிலிருந்து குருமூர்த்தி கால் காசுகூடத் திருடியிருக்க முடியாதென்றுதான் நாயுடுவும் நம்பினார்.

குருமூர்த்தி ஊரிலிருந்து காணாமல் போன ஆறாவது நாளோ, ஏழாவது நாளோ வழக்கமாக அவருக்குப் பிரசாதமோ, இரட்சைக் கயிறோ, அனுப்பும் சாமியார்கள் யாரையாவதுதான் தேடிக் கொண்டு போயிருப்பார் என்ற அநுமானத்தோடு, ஆர்.எம்.குருமூர்த்தி, கேர்ஆஃப் ஸ்ரீ ஆண்டிமலைச் சித்தர் சுவாமிகள் மடம் - ஆண்டி மலை - போஸ்ட் என்ற விலாசத்துக்கு ஒரு கவர் எழுதித் தபாலில் சோர்த்துவிடச் சொல்லி நாயுடுவிடம் கொடுத்திருந்தாள் கெளரி. அவள் அந்தக் கடித உறையை ஒட்டவில்லை. நாயுடுவும் அதை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் அப்படியே ஒட்டித் தபாலில் சேர்த்துவிடத்தான் நினைத்தார். இருந்தாலும் ஏதோ ஒர் ஆவலால் தூண்டப்பபட்டு அதைப் படித்துவிட முனைந்தார். மிக இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை அதிகமாகத் தாங்கிக் கொண்டு திணறும் ஒர் ஏழைக் கணவனின் ஏழை மனைவி படுகிற வேதனைகளையெல்லாம் கொட்டி அவள் அதைத் தன் புருஷனுக்கு எழுதியிருந்தாள். கடிதத்தைப் படிக்கத் தொடங்கிய நாயுடு கண் கலங்கினார்.

‘தேவரீர் திருவடிகளில் அடியாள் கெளரி அநேக நமஸ்காரம் செய்து எழுதிக் கொள்வது. இன்றுடன் நீங்கள் புறப்பட்டுப் போய் ஏழு நாட்கள் ஆகின்றன. எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்? ஒரு தகவலும் தெரியாமல் மனசுக்கு ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. குழந்தைகள் கமலியும், பாபுவும் ‘அப்பா எங்கே போயிருக்கிறார் சொல்லும்மா’ன்னு சதா என்னைப் பிய்த்து எடுக்கிறார்கள். ஸ்டோர்க்காரக் கிழவர் வீட்டு வாடகைக்காக மூணுதரம் ஆளனுப்பிவிட்டார். எனக்கானால் ஒரே கவலையாயிருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. நீங்கள் போன