பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

710 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



இடத்திலிருந்து ஒரு வரி கடுதாசு எழுதக்கூடவா ஒழியலை? குழந்தைகளை வைத்துத் கொண்டு நான் தனியாகக் கஷ்டப்படறேன். இந்தக் கையிலே கமலி, அந்தக் கையிலே பாபு, போறாததற்கு வயித்திலே ஒண்ணு... என்னை எல்லாரும் நச்செடுக்கறா பால்காரன் பாக்கி, மளிகைக்கடை பாக்கி... எல்லாம் பாக்கி நிற்கிறது. பொறுப்பில்லாதவர் மாதிரி இப்பிடிப் போயிட்டா என்ன பண்றது.”

...இப்படி ஒன்றா இரண்டா? கடந்த மூன்று மாதங்களுக்குள் குருமூர்த்தி போயிருக்க முடியுமென்று அவர்கள் நினைத்து அநுமானித்த மடங்கள், சோதிடர்கள் சித்தர்கள், சிநேகிதர்கள், உறவினர்கள் எல்லாருக்குமாகப் பத்துப் பதினைந்து கடிதங்களுக்கு மேல் எழுதியாயிற்று. ஒரு கடிதத்துக்கும் பதில் இல்லை. பதினேழாம் நம்பர் வீட்டுக்கு - கெளரிக்கு ஒரு பதில் கடிதத்தையாவது கொடுத்து விட்டுத் தம் உத்தியோகத்திலிருந்து ரிடையராக வேண்டுமென்பது தபால்கார நாயுடுவின் ஆசை.

பாவம் அவர் ரிடையராவதற்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருந்தன. கடந்த கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தம் கைப்படக் கொண்டுபோய் வழங்கிய பல்லாயிரம் கடிதங்களுக்காக அவர் எவ்வளவோ பெருமைப்படலாம்.அவரோ வழங்க வேண்டிய கடிதமொன்றை எதிர்பார்த்து இன்னும் கைக்கு வந்து சேராத கடிதமொன்றை இனி வரும் வரும் என்று கருதித் தவித்துக் கொண்டிருந்தார். வந்து சேராத அந்தக் கடிதமும் வந்து சேர்ந்து அதைக் கெளரியிடம் கொண்டு போய்க் கொடுத்தாலொழியத் தமது உத்தியோக வாழ்க்கை குறைவுடையதாகவே முடியும் என்பதுபோல் நாயுடுவுக்கு ‘ஸென்டிமென்டலாக’ ஒரு தவிப்பு வந்துவிட்டது. கடைசி நாளில், கடைசி டெலிவரியிலாவது ‘ஒண்னுமில்லிங்களே, அம்மா!’ என்ற வழக்கமான எதிர்மறை வார்த்தைகளை மாற்றி, ‘அம்மா உங்களுக்கு ஒரு கடிதாசு வந்திருக்கு’ என்று முகம் மலர அகம் மலர எடுத்துக் கெளரியிடம் கொடுத்துவிட வேண்டுமெனத் தவித்தார் நாயுடு. கனகம்மாள் தெரு - பதினேழாம் நம்பர் - கெளரி என்ற விலாசம் ஒன்பதாவது பீட் போஸ்ட்மேன் நாயுடுவின் எத்தனையோ பல விலாசங்களில் சாதாரணமான ஒன்றல்ல. அந்த விலாசத்தின் கீழ்ப் பஞ்சடைந்த கண்களும், எண்ணெய் காணாத தலையும், கிழிந்த ஆடையுமாக மூன்று உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. வெளிப்படாத இன்னோர் உயிரும் அந்தத் தாயின் மடியில் இருந்தது. விலாசதாரர்கள் தங்களுக்கு வராத அல்லது வர வேண்டிய ஒரு கடிதத்துக்காகத் தவிக்கும் இயல்பை நாயுடு பலமுறை கண்டிருக்கிறார். இந்த ஒரு விலாசதாரரோ தனக்கு ஒரு பதில் கடிதம் கொடுக்க முடியாத தபால்காரரையே அதற்காகத் தவித்து ஏங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

“நாயுடு என் ஜன்மம் விடியவே விடியாது போலிருக்கு. அவரும் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய்விட்டார். நல்லதங்காள் மாதிரிக் குழந்தைகளையும் தள்ளிப்பிட்டு நான் கிணத்திலே விழுந்துட வேண்டியதுதான்! வயிறும் பிள்ளையுமாத் தனியாகத் தவிக்கிறேன். ஏதோ வீட்டுலே ஒத்த ஓட்டைத் தையல்மிஷின் இருக்கு.அதுலேயும் எத்தனை பேருக்குத் தச்சுக்கொடுத்துச் சம்பாதிக்க