பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில் ★713



“கடிதாசு ஒண்ணும் இல்லியா நாயுடு”

நாயுடு அதைப் படித்து முடிப்பதற்குள் கெளரி தன் வழக்கமான கேள்வியுடன் குழந்தைகளோடு வாசலுக்கு வந்துவிட்டாள்.

இரண்டு நிமிஷங்கள் பதிலே சொல்லத் தோன்றாமல் கண்களில் நீர் பெருகிட அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த நாயுடு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “ஒண்னுமில்லிங்களே அம்மா!” என்று உடைந்த குரலில் பதில் சொல்லிவிட்டுத் தயங்கித் தயங்கி மேலே நகர்ந்தார். இருபத்தைந்து வருட காலத்துக்கு மேலாக நாணயமாகப் பணிபுரிந்த அந்தத் தபால்காரர், ரிடையராவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன் ஒரு விலாசதாரரின் கடிதத்தை அவரிடம் கொடுக்காமலே தனியாகவும் பத்திரமாகவும் எடுத்துப்போய்க் கிழித்தெறிகிற குற்றத்தைச் செய்யும்படி அன்று நேர்ந்துவிட்டது. அவர் அன்று மறைத்துவிட்டதனால் இந்த அவலம் வாழ்நாள் முழுவதுமே பதினேழாம் நம்பர் பெண்ணுக்கும் தெரியாமலிருந்துவிடப் போவதில்லை. ஆனால் அதை அவளிடம் கொடுத்து விட்டு அவள் படுகிற துயரைச் சகிக்கும் தைரியம் அல்லது கடுமை நாயுடுவிடம் இல்லை, என்றுதான் கூற வேண்டும். ‘தபால்காரன் என்பவன் பலருடைய கடிதங்களைச் சுமந்து கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அப்படிச் சுமந்து கொண்டு போகிற கடிதங்களில் அவற்றை அடையப் போகிறவர்களின் சுகமும் இருக்கலாம், துக்கமும் இருக்கலாம். அதிர்ச்சியும் இருக்கலாம், ஆனந்தமும் இருக்கலாம். இருப்பினும் அவற்றைத் தபால்காரன் சுமப்பதில்லை என்பதுதான் உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் நாயுடுவின் சித்தாந்தம். ஆனால் இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்ணுக்குக் கடைசி நாளில் ஒரு நல்ல பதில் கடிதத்தைக் கொடுக்க முடியாமல் போன ஏக்கம் அவருடைய மண்டை உள்ள வரையில் வேகாது.

அன்று சாயங்காலம் தபாலாபீசில் போஸ்ட் மாஸ்டர் தலைமையில் நடந்த விருந்தில் தபால்காரர் சங்க யூனியன் காரியதரிசியாகிய அரசு இளம்பாலன் என்ற இளைஞர் “நாயுடு மலர்ந்த முகத்தினர், அவருடைய கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட சேவை நமக்கு ஒர் இலட்சியப் பாடம்” என்று ஏதேதோ பாராட்டிப் பேசினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நாயுடுவோ தலைகுனிந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். அது ஆனந்தக் கண்ணீர் என்று மற்றவர்கள் நினைக்கலாம். உண்மையில் ஒர் அழகிய சுமங்கலிக்கு நேர்ந்துவிட்ட அவலத்தை மனத்தில் தாங்கி அவர் கண்கலங்கிக் கொண்டிருந்தார். பாற்கடலின் விஷத்தைத் தன் நெஞ்சில் வாங்கி வைத்துக் கொண்டு மற்றவர்களை எல்லாம் காப்பாற்றிய பரமசிவனைப் போல் பதினேழாம் நம்பருக்கு வந்த பதிலின் துக்கத்தை முழுவதும் தன் மனத்துக்குள் வாங்கி வைத்துக் கொண்டு நாயுடு அழுவது யாருக்குப் புரியும்?

(கல்கி, 9.8.1964)