பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95. ஒரு மான் + ஒரு வலை

ந்த முறை எப்படியும் அந்த அழகிய பறவை தன் வலையில் வந்து விழுந்து விடும் என்றே அவன் உறுதியாக நம்பினான். இதற்கு முன்பு எப்போதும் அவனுடைய எந்த ஒரு கடிதத்துக்கும் அவளிடமிருந்து இப்படி ஒரு பதில் கிடைத்ததே இல்லை; அதாவது ஆதரவான பதிலும் கிடைத்ததில்லை. ஆட்சேபணையான பதிலும் கிடைத்ததில்லை. இப்போதுதான் முதன் முறையாக அந்தப் பூஞ்சிட்டு தன் பொன்னிறக் கரத்தினால் அவனுக்கு மறுமொழி எழுதியிருக்கிறது.

ஒரே ஒரு வரியில்தான் அந்தப் பதில் அமைந்திருந்தது. அதை ஒரு முழு வாக்கியம் என்று கூடச் சொல்லி விட முடியாது. ‘உங்கள் விருப்பப்படியே - சாயங்காலம் ஆறு மணிக்கு ஆறுமுகம் பூங்காவில், மேற்குக் கோடியிலுள்ள புல்வெளியில் சந்திக்கலாம்’ என்று தான் அதில் எழுதப்பட்டிருந்தது. ஒரு வாக்கியமானால் என்ன? முக்கால் வாக்கியமானால் என்ன? பதில் ஒன்று வந்திருக்கிறது என்பதே பெரிய காரியம்தான். பதிலே ஒரு நல்ல சூசகம். அந்தச் சிங்கார நளினக் குறுநகைச் செல்வியை எப்படியும் வசப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்கு இருந்தது. தேர்ந்த வேட்டுவனின் சாமர்த்தியத்துடனே இலக்குத் தப்பாமல் இடம் தப்பாமல் இந்த முறை வலையை வீசியிருந்தான் அவன். வீசுவதற்கென்ற தனி வலைகள் அவனுக்குத் தேவையில்லை. அவனே ஒரு பெரிய வலைதான். தன்னைப் பற்றிச் சக மாணவர்களும், கல்லூரியின் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் மறைவில் ஒரு தினுசாகப் பேசிச் சிரிப்பதும், தனக்குக் ‘கோயில் காளை’ என்று பட்டப் பெயர் சூட்டியிருப்பதும் அவனுக்குத் தெரியாத விஷயங்களல்ல; எந்த விஷயமானாலும் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்பதில் அவனுக்கு அயராத நம்பிக்கை. ஹாஸ்டல் செலவுகளுக்கும், பாக்கெட் மணிக்கும் மாதா மாதம் பிறந்தால் ஆயிரம் ரூபாய்க்குச் செக் அனுப்பி வைக்கிற பணக்காரத் தகப்பனுக்கு ஒற்றைக்கொரு மகனாயிருக்கிறவன் கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்தால்தான் என்ன குடி முழுகிப் போகிறதாம்?

பல வேளைகளில் அவன் தன்னைப் பற்றித் தனக்குத் தானே பின்வருமாறு நினைப்பதுண்டு. -

'நான் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மருத்துவக் கல்லூரியின் அதிகாரிகளும், நிர்வாகிகளும் பெண்கள் ஹாஸ்டலுக்கும், ஆண்கள் ஹாஸ்டலுக்கும் நடுவில் இவ்வளவு பெரிய சுவரை எழுப்பி விட்டதற்காகப் பெருமையும் திருப்தியும் பட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சிமெண்ட் சுவரையும் கடந்து போய் ஆர்.எஸ். ராஜாவின் காரியங்களும்,செல்வாக்கும், காதல் கடிதங்களும் பரவ முடியும் என்பதை யாருமே மறுக்க முடியாது.”