பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஒரு மான் + ஒரு வலை ★ 715



அந்த மெடிகல் காலேஜ் எல்லைக்குள் அவன்தான் ராஜா. குறிப்பிட்ட ஏதாவதொரு கோணத்திலிருந்து பார்த்தால் மட்டும் ராஜாவானால் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். அவனோ எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் ராஜாதான். தோற்றம், சக மாணவர்களுக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது, அழகும் தளுக்கும், மினுக்குமுள்ள பகட்டு நிறைந்த மாணவிகளை ‘மாட்னி ஷோ’வுக்கு அழைத்துப் போவது, வருட ஆரம்பத்தில் புதிய மாணவ மாணவிகளை அளவுக்கதிகமாகவே ‘ராகிங்’ வம்புகளுக்கு ஆளாக்கி மகிழ்வது போன்ற பல காரியங்களில் ஏகசக்ராதிபதி அவன். ‘ஒரு கொழுப்பு நிறைந்த கோயில் காளையின் திமிரும், மாதம் ஆயிரம் ரூபாய் செலவழிக்க முடிந்த ஒரு தத்தாரியின் அல்லது ஊதாரியின் சுகானுபவங்களும் உள்ளவன் எங்காவது ஒரு நல்ல மாணவனாக இருக்கமுடியுமா?’ என்று நீங்கள் கேட்க விரும்பலாம். நல்லவனாயிருப்பது வேறு; வல்லவனாக இருப்பது வேறு; இந்த இருபதாவது நூற்றாண்டில் பல விதத்திலும் நல்லவனாக இருப்பதைக் காட்டிலும் வல்லவனாக இருப்பதுதான் புத்திசாலித்தனமான காரியம். எனவே நமது திரு.ஆர்.எஸ். ராஜா நல்லவனாக இல்லாவிடினும் பல விஷயங்களில் வல்லவனாக இருந்தான்.சீனியர் மாணவன் என்ற முறையில் மற்றவர்களையும் கட்சி சேர்த்துக் கொண்டு அந்த ஆண்டுக் கல்லூரித் தொடக்கத்தில் புதிதாக வந்த மாணவ மாணவிகளை ஆர்.எஸ். ராஜா படுத்திய ‘ராகிங்’ கொடுமைகளை மாதிரிக்குக் கொஞ்சம் பார்க்கலாம்.

சில மாணவிகளின் இரட்டைப் பின்னல்களில் ஊசிப் பட்டாஸ்கள் சரம் சரமாகக் கட்டி வெடிக்கப்பட்டன. மாணவர்களைப் பனியனோடு நிறுத்தி முதுகு வழியாகப் பனியனுக்குள் ஐஸ் கட்டிப் போடப்பட்டது. டான்ஸ் தெரிந்த தோஷத்திற்காக ஒரு புதிய மாணவி ‘குறத்தி’ டான்ஸுக்குரிய குறவஞ்சி வேஷம் போட்டுக் கொண்டு வரச்சொல்லி வற்புறுத்தப்பட்டாள். வேறு வழியின்றி அவளும் அப்படியே செய்ய வேண்டியதாயிற்று. இந்த மாதிரி ‘ராகிங்’ ஆர்.எஸ்.ராஜாவின் ஒவ்வொரு நாள் வாழ்விலும்கூட உண்டுதான். ஒரு பெரிய பணக்கார வியாபாரியின் ஏகபுத்திரனாகிய திரு. ஆர். எஸ். ராஜாவின் மருத்துவக்கல்லூரி வாழ்க்கையில் விசேஷ அம்சங்கள் இரண்டு. ஒன்று ஹாஸ்டல் முதலிய செலவுகளுக்காகவும் மாதா மாதம் ஆகிற ஆயிர ரூபாய்ச் செலவு.இரண்டு நாளொரு மாணவியும் பொழுதொரு கேர்ள் பிரெண்டுமாக அவன் சினிமா தியேட்டர்களையும் நவநாகரிக ஸில்க் புடவைக் கடைகளையும் சுற்றிக்கொண்டிருப்பது. இதைத் தவிர கிரிக்கெட் மேட்ச், ஸ்விம்மிங்பூல், பிக்னிக், கல்லூரியின் சக மாணவர்களோடு அரட்டை எல்லாம் வகைக்குக் கொஞ்சமாக அவனிடம் உண்டு; மாணவிகளை - அதுவும் கொஞ்சம் அழகாக நிறமாக இருக்கிற மாணவிகளைக் கண்டால் ஆர்.எஸ்.ராஜா வலுவில் போய் எதிர்கொண்டு சிரித்துச் சிரித்துப் பேசுவான். அவ்வளவு சொல்லுவானேன்? அவன் மற்றவர்களுக்கு விரிக்கிற வலை என்று தனியாக ஏதுமில்லை; அவனே ஒரு பெரிய வலைதான்!

"மிஸ் நளினி! யூ ஆர் லுக்கிங் ஸோ நைஸ் வித் திஸ் புளு ஸாரி..” என்று திடீரென்று அந்த நளினியே வெட்கப்படுமாறு அந்த உடையின் வண்ண வனப்பை