பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஒரு மான் + ஒரு வலை ★ 719



சிரித்துக் கொண்டே அவள் கையெழுத்திட்டபோது ஆர்.எஸ்.ராஜாவின் முகத்தில் அசடு வழிவது மாறித் தீர்மானமாக அரை லிட்டர் ஆயிலே வழிந்தது.

"பரவாயில்லை மனோரஞ்சிதம், உங்களது படத்தை நான் உங்கள் ஞாபகமாக வைத்துக் கொள்வதுபோல் என் ஞாபகமாக நீங்கள் எனது இந்தப் படத்தையாவது வைத்துக் கொள்ளலாம்” என்று அவன் தன் படத்தை எடுத்து அவளிடம் நீட்டியபோது,

"நோ நோ! வெறும் படத்தைச் சும்மா கொடுத்தால் எப்படியாம்? ஏதாவது எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் நல்லது; இதோ நானே உங்கள் படத்தின் பின்புறம் எழுதுகிறேன்; நீங்கள் கையெழுத்து மட்டுமாவது போட்டுக் கொடுங்கள்” என்று சொல்லி மூன்றாவது முறையாகவும் ஒரு மில்லியன் டாலர் ‘ஸ்மைலை’ உதிர்த்துவிட்டு ‘என் உடன்பிறவாச் சகோதரி அருமைத் தங்கை மனோரஞ்சிதத்துக்கு என் பாசத்தின் நினைவாக’ என்று எழுதி-அப்படி எழுதியதைக் கையால் மறைத்துக்கொண்டு, “ப்ளீஸ்! இங்கே கீழே ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க” என்றதும் ஆர்.எஸ்.ராஜா, அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் உடனே கையெழுத்துப் போட்டுவிட்டான். தேதியும் போடச் சொல்லிவிட்டு மற்றொரு மில்லியன் டாலர் ஸ்மைலை அவள் உதிர்த்தாள். ஆர்.எஸ்.ராஜா தேதியும் போட்டுக் கொடுத்தபிறகு தான் அவள் மேலே மறைத்திருந்த தன் கையை எடுத்தாள். ‘உடன் பிறவாச் சகோதரி மனோரஞ்சிதத்துக்கு’ என்பது போல அங்கு எழுதியிருந்ததைப் பார்த்தவுடனே ஆர்.எஸ்.ராஜாவின் முகத்தில் இன்னும் அரை லிட்டர் ஆயில் அதிகமாக வழிந்தது.ஆர்.எஸ்.ராஜா முயற்சி திருவினை ஆக்குவதில் இப்போது இறுதியாக நம்பிக்கை இழந்தான். அந்தகோ! அவனுக்கு உங்கள் அனுதாபங்கள் தேவை!

இப்போது அவள் தொடங்கினாள். "பை தி பை மிஸ்டர் ஆர்.எஸ்.ராஜா! நான் இன்னிக்கு உங்களை இங்கே சந்திக்க வந்ததே ஒரு முக்கியமான காரியமாகத்தான். அதை மறந்தே போயிட்டேனே... பேரண்ட்ஸ்கிட்ட இருந்து மணியார்டர் இன்னும் வரல்லே, ஹாஸ்டல் பீஸ் கட்டணும். ஷாப்பிங் வேறே இருக்கு ஒரு நூறு ரூபாய் பணம் அவசரமா வேணுமே... உங்களுக்கு ரொம்ப இளகின மனசுன்னு எல்லாருமே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.நீங்க அவசியம் இப்பவே தந்துதான்ஆகணும். ஒன் வீக்கிலே இதை நான் திரும்பத் தந்துடுவேன்.”

உடனே ஆர்.எஸ்.ராஜா தன் சட்டைப் பையிலிருந்து நல்ல சலவை நோட்டுக்களாகப் பத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து எண்ணி அவனிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக் கொண்டு ஒரு மில்லியன் டாலர் ஸ்மைலை ஐந்தாவது தடவையாக உதிர்த்துவிட்டு,"அகோ! சுந்தரகேசரிப் பதுமையே கேளும்' என்கிற விக்கிரமாதித்தன் கதைப்பாணியில் அவனைக் கோபத்தோடு விளித்துப் புகல்வாள்.

"மிஸ்டர் ராஜா!. நன்றாகக் கேட்டுக் கொள்ளும்! இனிமேல் நீர் யாரிடமாவது என்னைக் காதலிப்பதாகப் பேசிக் கொண்டு திரிந்தாலோ, எனக்கே புத்தகத்தில் கடிதம்