கலைஞரின் சட்டமன்ற உரைகள்
269
அறிக்கையைப் பாராட்டி மகிழ்ந்து இருக்கிறார்கள். ஆழ்ந்த அனுபவம் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் அன்பிற்குரிய மணி, அழுத்தந்திருத்தமாக பல கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார். இந்த அரசு எப்படியெல்லாம் இன்னும் வேகமாக, திட்டவட்டமாகச் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்திருக்கிறார். திரு. சந்தானம், பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நிறைந்த வாழ்த்துக்களைத் தந்து, நேதாஜி அவர்களுக்கு ஒரு சிலை சென்னையிலே அமைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்பதை என்னுடைய (மேசையைத் தட்டும் ஒலி) பதிலுரையின் தொடக்கத்திலேயே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நண்பர், சுயேச்சை உறுப்பினர் திரு. வெங்கடாசலம், எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது, மேலும் எடுக்கப்பட வேண்டும், அப்பொழுதுதான் எதிர்காலத் தமிழகம் நல்ல முறையில் இருந்திட இயலும் என்ற எச்சரிக்கையை தன்னுடைய பேச்சாக நேற்று ஆற்றிக் கொண்டிருந்தார்.
திருநாவுக்கரசு அவர்கள், உண்மையிலேயே மிக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, வரவுசெலவுத் திட்டத்திலே புள்ளி விவரங்களிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை, இவற்றை யெல்லாம் எடுத்துக்காட்டி, அதிலே எனக்கு வித்தியாசமான கருத்துக்கள் இருந்தாலும்கூட நாட்டுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக ஆதிதிராவிடர்களுக்கு, பழங்குடி மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மேலும் அதிகமாக நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் பேசியதன் நோக்கம் பாராட்டுக் குரியதாக இருந்தது என்பதை நான் மறக்கவில்லை.
இந்திய தேசீய லீக் கட்சியினுடைய தலைவர் லத்தீப் அவர்கள் 'சென்னை' என்ற ஒரு பெயரிலே மாத்திரம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மறுத்தாலும், எதிர்க்கவில்லை என்று இறுதியாக விளக்கி, இந்த அவையிலே தன்னுடைய ஆதரவை, மதராஸ் என்ற சொல் தமிழாக இல்லாவிட்டாலும், பிறமொழிச் சொல்லாக இல்லாத காரணத்தால், அந்நிலைக்கு