உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

நிதிநிலை அறிக்கை மீது

அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது அந்த மாநிலங்களோடு தொடர்பு கொண்டு பேசிய நேரத்தில் இந்த மாதம் 14, 17, ஆம் நாட்களில் அந்த மாநிலங்களிலே வைக்கப்படவிருக்கின்ற நிதிநிலை அறிக்கையிலேதான் இந்த விவரங்கள் எல்லாம் கிடைக்கும் என்று அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். கர்நாடக மாநிலத்திலே சில கூறுகள் நீங்கலாக விரிவான கோட்பாட்டின் அடிப்படையில் மாநில வருவாயில் 36 சதவீதம் உள்ளாட்சி மன்றங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கருதியுள்ளது என்று தெரிய வருகிறது. இது பற்றிய விவரங்கள் மார்ச் 17ஆம் தேதிக்குப் பிறகுதான் கிடைக்கும். மேற்கு வங்க மாநிலத்தில் அவர்கள் மொத்த வரி வருவாயில் 16 சதவீதம் உள்ளாட்சி மன்றங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றது. நம் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மேற்கு வங்காளத்திலுள்ள உள்ளாட்சி மன்றங்களிடம் அதிக பொறுப்புக்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73, 74 விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள பெரும்பான்மையான இனங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. ஆண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் 52 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, அவர்களுக்கு அதிகமாக விழுக்காடு ஒதுக்கியிருப்பது இயல்பேயாகும்.

இந்த மாநிலங்களின் வருவாயைப் பகிர்ந்தளிப்பது குறித்து, முழுமையான விவரங்களை நமது மாநில அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த விவரங்கள் இல்லாத நிலையில், மாநிலத்திலிருந்து வேறு சில மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றனவா, அல்லது அவை நிறைவேற்றப் பட்டு விட்டனவா என்பது பற்றியும், அவை பகிர்ந்தளிக்கப் படும் நிதியோடு சேர்க்கப்பட்டு விட்டனவா என்பது பற்றியும் தெரியவில்லை. இந்த மூன்று மாநிலங்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்ததன் அடிப்படையில், முடிவை எடுப்பதற்கு முன்னர், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, இது குறித்து விரிவான பகுப்பாய்வு செய்யப்படும் என்ற உறுதியை அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

6