420
நிதிநிலை அறிக்கை மீது
-
திட்டத்தால் பயன்பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கடன் வாங்கும்போதே ஒரு ரூபாய் வட்டி அவர்கள் வேறு யாரிடமாவது வாங்கினால் 10% அல்லது 15% வட்டி தர வேண்டும். வெறும் ஒரு ரூபாய் வட்டிக்கு. 100 ரூபாய் வாங்கினால் 99 ரூபாய் கொடுப்பார்கள். மறுநாள் 100 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மறுபடியும் கடன் வாங்கலாம் என்கின்ற அளவுக்கு, அந்தக் கடனை வாங்கி, சிறுசிறு தொழிலை ஆரம்பிக்கலாம் என்கின்ற அளவுக்கு ஒரு மகத்தான திட்டம். இவ்வளவும் 1969முதல் இன்று வரையில் - இந்த எளியோனால் (மேசையைத் தட்டும் ஒலி) இந்த எளியோன் ஏற்றுக்கொண்ட பொறுப்பால் - தமிழகத்தில் வழக்கமான வளர்ச்சித் திட்டங்களன்னியில், புதியதாக சமுதாயத் திட்டங்களாக, பொருளாதார ஏற்றங்களுக்கான திட்டங்களாக அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை, இந்த 12ஆவது நிதிநிலை அறிக்கையைப் படித்து, அதற்கான விவாதத்திற்குப் பதிலைக் கூறுகின்ற நேரத்தில் நான் நினைவுபடுத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் நினைவுகூரவேண்டும். ஏனென்றால் கடந்த நான்கைந்து நாட்களில் நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று இங்கே வைக்கப்பட்டதே பல பேருக்கு மறந்து போய்விட்டது. நான்கூட எண்ணினேன். தலைவர் அவர்களே, உங்களுடைய அனுமதி பெற்று, மீண்டும் இன்றைக்கு நிதிநிலை அறிக்கையைப் படித்துவிட்டு மறுபடியும் உறுப்பினர்களைப் பேசச் சொல்லலாம் என்றுகூட எண்ணினேன். ஆனால் இவ்வளவு சங்கடங்களுக்கு இடையிலும்கூட தங்களுடைய கடமையை ஆற்றவேண்டும் என்று எண்ணிய கண்ணியம் மிகுந்த உறுப்பினர்கள் அந்தக் கடமையை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் பேசிய பேச்சுக்களைப் படித்துப் பார்த்து நான் உணர்ந்துள்ள காரணத்தினால், இந்த அறிக்கையிலே என்னென்ன திட்டங்களைச் சொல்லியிருக்கிறோம் என்பதை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன்.