பக்கம்:நித்திலவல்லி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. நல்லடையாளச் சொல்

திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரை மாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போக வேண்டும் என்று புறப்படும் போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக் கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும் போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூட்டையும், பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன.

தோட்கோப்பாக வலது தோளில் தொங்க விட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்து விட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும், கைகளையும் கழுவிக் கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேறியிருந்த கண்களில், சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது.

இருட்டுவதற்குள் மோகூரை அடைந்து விட வேண்டும் என்பது அவன் திட்டம். மோகூரில் மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைக் கேட்டறிய வேண்டும். களப்பிரர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/10&oldid=946411" இலிருந்து மீள்விக்கப்பட்டது