பக்கம்:நித்திலவல்லி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

நித்திலவல்லி / முதல் பாகம்


கொடுமைக்கு அஞ்சி இப்போதெல்லாம் அவர் ஒரே இடத்தில் இருப்பதில்லையாம். பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையைப் பெற்றிருந்தும் கொள்ளையடித்தவர்கள் தாங்கள் கொள்ளை கொண்ட பொருளுக்கு உண்மையிலேயே உரியவன் எப்போதாவது அவற்றைத் தேடி வந்து மீட்பானோ என்ற பயத்துடனேயே இருப்பதுபோல்தான் களப்பிரர்களும் பாண்டிய நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

மறுபடி பாண்டியர்குலம் தலையெடுக்க யார் யார் உதவுகிறார்கள் என்று சந்தேகப்பட்டாலும் அப்படிச் சந்தேகத்துக்கு உரியவர்களை ஈவிரக்கமின்றி துன்பப்படுத்தியும், கொலை செய்தும், சிறை பிடித்தும், சித்திரவதைகள் செய்தும் கொடுமை இழைக்கக் களப்பிரர்கள் தயங்கியதில்லை.

பாண்டிய மன்னர்களுக்கு அரச தந்திரங்களையும், உபாயங்களையும் சொல்லும் மதி மந்திரிகளின் பரம்பரையில் தமிழ்ப் புலவர் மரபில் வந்தவர் மதுராபதி வித்தகர். அந்தப் பரம்பரையின் கடைசிக் கொழுந்தையும்கூடக் கிள்ளிவிடக் களப்பிரர்களுக்கும் ஆசைதான். ஆனால், அது அவர்களால் முடியாத காரியமாயிருந்தது. மூத்துத் தளர்ந்து போயிருந்தாலும் மதி நுட்பத்திலும், தந்திர உபாயங்களாலும் சிறிதளவு கூடத் தளராமல் மங்கலப் பாண்டிவள நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மறுபடி பாண்டியராட்சி மலர்வதற்கு ஒர் இரகசிய இயக்கத்தையே கட்டி வளர்த்து உருவாக்கிக் கொண்டிருந்தார் மதுராபதி வித்தகர். மதுராபதி வித்தகரைப் பற்றிப் பாட்டனார் சொல்லியிருந்ததெல்லாம் இளைய நம்பிக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கொள்ளைக் காரர்களைப்போல் வந்து பாண்டிய நாட்டைப் பிடித்து ஆண்டுகொண்டிருக்கும் களப்பிரர்களிடமிருந்து அதை மீட்க முயன்று கொண்டிருக்கும் ஓர் இணையற்ற இராஜதந்திரியைச் சந்திப்பதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவரை எப்படி வணங்குவது, எந்த முதல் வாக்கியத்தினால் அவரோடு பேசத் தொடங்குவது, தான் இன்னான் என்று எப்படி அவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/11&oldid=712972" இலிருந்து மீள்விக்கப்பட்டது