பக்கம்:நித்திலவல்லி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

நித்திலவல்லி / முதல் பாகம்



முதல்முதலாக அந்த அழகிய வாலிபன், தன்னை மதித்துப் புரிந்து கொண்டு சுமுக பாவத்தில் முகமலர்ச்சியோடு பேசிய இச்சொற்கள் அந்தப் பேதைக் கணிகைக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்திருக்கவேண்டும் என்பதை அவள் வதனம் சிவந்து நாணி மலர்ந்ததிலிருந்து அறிய முடிந்தது.

தன்னுடைய பதற்றத்தில் அவளைத் தவறாக மதிப்பிட்டு விட்டதற்காக இளைய நம்பியின் மனம் கூசி நாணத் தொடங்கியிருந்தது இப்போது. அழகன் பெருமாளிடமும் குறளனிடமும் கூடக் கண்களாலேயே குறிப்புக் காட்டி விடை பெற்றாள் இரத்தினமாலை.

முத்துப் பல்லக்கு வீதியில் படியிறங்குகிற வரை அவள் பார்வை இளைய நம்பியின் மேல்தான் இருந்தது. பல்லக்கு வீதியில் இறங்கி மறைந்ததும், இப்பால் தன்னுடைய பதற்றங்களையும், சினத்தையும் மறந்து பொறுத்துக்கொண்டதற்காக அழகன்பெருமாளைப் பாராட்டிச் சில சொற்கள் கூறினான் இளையநம்பி.

"ஐயா! நீங்கள் இந்த உபசார வார்த்தைகளைக் கூறாவிட்டாலும், நானோ, இரத்தினமாலையோ, எங்களைச் சேர்ந்தவர்களோ, கடமைகளில் ஒரு சிறிதும் தளர்ச்சி அடைந்து விட மாட்டோம். பெரியவர் மதுராபதி வித்தகரிடம் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்து விட்டுக் களப்பிரர் ஆட்சியை மாற்றுவதற்குச் சூளுரைத்திருக்கிறோம். அந்தச் சபதத்தை நாங்கள் ஒருகாலும் மறக்கவே முடியாது” என்றான் அழகன்பெருமாள்.

மேலும் சில சொற்களால் அவனுடைய கடமை உணர்வைப் பாராட்டிய இளையநம்பி, தன்னுடைய ஐயப்பாட்டை மீண்டும் அவனிடம் வினவினான்:-

“அழகன்பெருமாள் இப்போது இரத்தினமாலை தன் கைகளில் சங்கேத எழுத்துக்களின் வடிவில் சுமந்து செல்லும் இந்த வினாக்களுக்கு யார், எப்படி, எங்கிருந்து விடை தருவாா்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/111&oldid=945335" இலிருந்து மீள்விக்கப்பட்டது