பக்கம்:நித்திலவல்லி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

119



“நீங்களே மறுமொழி சொல்லவில்லை என்றால் நான் வேறு எங்கு போக முடியும்? யாரைக் கேட்க முடியும்? தயை கூர்ந்து எனக்கு வழி காட்டி உதவ வேண்டும்...”

“விருந்தோம்புவதும், பிறருக்கு உபகாரம் செய்வதும் என்னைப் போல் ஒவ்வொரு வேளாளனுக்கும் கடமை. நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் உங்களை நான் உபசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் முதலில் வினாவியது போல், பாண்டிய நாட்டு அரசியல் நிலைமை பற்றி என்னை எதுவும் வினவக்கூடாது. அதைப் பற்றி என் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது. முந்நூறு ஏர்கள் பூட்டி உழக் கூடிய நிலக் கிழமை இந்த மருத நிலத்து ஊரில் எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.”

“ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. பெரியவர் மதுராபதி வித்தகர் இருக்குமிடத்தை அறிந்து, நான் அவரைச் சந்தித்தே ஆக வேண்டும். இந்த ஆண்டு ஆவணித் திங்கள் முழு நிலா நாளில் அவிட்ட நட்சத்திரத்தன்று தொடங்கும் திருவோண விழா நாள் முதலான விழா நாள் ஏழில், இரண்டாம் நாளன்று நான் அவரைச் சந்தித்தாக வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பாண்டிய வேளாளர் மரபில் வந்த தாங்களே இந்த நல்லுதவியைச் செய்யாவிடில், வேறு யார் செய்யப் போகிறார்கள்?”

“நான் பாண்டிய வேளாளர் மரபில் வந்தவன் என்று அறிந்து பாராட்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அந்தத் தகுதியைச் சொல்லிப் பாராட்டுவதால், உங்களுக்கு முன்னால் மட்டும்தான் அதற்காக நான் பெருமைப்படலாம். ஆனால், இதே பெருமையை இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்கு முன்னால் நான் கொண்டாடுவேனாயின், என் தலையைச் சீவிக் கழுமரத்தில் தொங்க விட்டு விடுவார்கள்.”

“கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு அப்படி எல்லாம் நேராது ஐயா! நீங்கள் அறக்கோட்டங்கள் மூலமாகவும் அன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/120&oldid=945300" இலிருந்து மீள்விக்கப்பட்டது