பக்கம்:நித்திலவல்லி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

121



ஆனால், வந்திருக்கும் புதிய மனிதனிடம் அதை எப்படிக் கூறுவது என்றும் அவருக்கு அச்சமாக இருந்தது. பதற்றமும், முன் கோபமும் உள்ளவன் போல் தெரியும் அந்த மனிதன், புலித்தோல் அங்கியோடு எதிரே தெரியும் போது ஓர் அசைப்பில் புலியே நிற்பது போலிருந்தது. நெடுநேரம் பேசி, அந்தப் புதிய மனிதனைத் தன் விருந்தினனாக இணங்க வைத்து, அடுத்த வீதியிலிருந்த அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியகாராளர். போகும்போது “ஐயா! சிறிது மெல்லப் பேசலாமே? ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறீர்கள்?” என்று அவர் அந்தப் புதிய மனிதனை வேண்டிக் கொண்டபோது-

“ஏன் இப்படி வேண்டுகிறீர்கள்? உரத்த குரலில் பேசுவதற்கு கூடக் களப்பிரர் ஆட்சியில் தண்டனை உண்டா?” என்பதாக முன்னைவிட உரத்த குரலில் அவரை வினாவினான் அவன். இப்படி எல்லாம் வினாவுவதைப் பார்த்தால், அந்த மனிதனை நம்பலாம் போலவும் இருந்தது. கடந்த காலத்தில் இதே போல ஆசை காட்டி நெருங்கி வஞ்சகம் செய்த சில ஒற்றர்களைப் பற்றி ஞாபகம் வந்தபோது பயமாகவும் இருந்தது; எதையும் உறுதி செய்ய முடியாமல் இருந்தது.

வந்திருந்த புதிய மனிதனை அறக்கோட்டத்தில் தங்க வைத்து விட்டுப் பெரியவரைச் சந்திக்க விரைந்து சென்றார் காராளர். அவர் சென்ற போது, பெரியவர் ஆலமரத்தின் விழுதுகளிடையே இரு கைகளையும் பின்புறம் கோத்தபடி உலாவிக் கொண்டிருந்தார். காராளரை எதிரே கண்டதுடன், அவரே முன் வந்து தெரிவித்த செய்தி வியப்பை அதிகப் படுத்துவதாக இருந்தது: “காராளரே! இப்போது நீங்கள் எதற்காக என்னைத் தேடி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காண வந்திருக்கும் புதியவனைப் பற்றி அறியத்தானே வந்திருக்கிறீர்கள்? திருவோண முதலாக ஏழு நாள் நிகழும் அவிட்ட நாள் விழாவின் முன் தினம் அந்தத் திருக்கானப்பேர்ப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்தது போலவே இன்று என்னைச் சந்திக்குமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/122&oldid=945302" இலிருந்து மீள்விக்கப்பட்டது