பக்கம்:நித்திலவல்லி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24. மறுமொழி வந்தது

உறங்காமல் கண் விழித்திருந்து அந்த அலங்கார மயமான கணிகை மாளிகையில் இளையநம்பி முதலியவர்கள் காத்திருந்த இரவு அவர்கள் பொறுமையைச் சோதிப் பதாயிருந்தது. நேரம் ஆக ஆகப் புதுப் புதுச் சந்தேகங்கள் தோன்றின. இரவு முடியத் தொடங்கிக் காற்றும் சூழ்நிலையும் குளிர்ச்சி அடைகிற அளவு வைகறையும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அரண்மனைக்கு முத்துப் பல்லக்கிலே சென்ற கணிகை இரத்தினமாலையும் திரும்பவில்லை. கோட்டைவாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதனால் கணிகை மாளிகைக்கு வந்து சேரக்கூடும் என்று அழகன் பெருமாள் அதுமானம் செய்து உரைத்த உபவனத்து நண்பர்களும் அங்கு வந்து சேரவில்லை. இளம்பிள்ளை பயமறியாது என்பதுபோல் ‘அவர்களைத்தேடி நகருக்குள் புறப்படலாம்’- என்றுகூட இளையநம்பி முன் வந்தான். ஆனால் அழகன் பெருமாள்தான் அதற்கு இணங்கவில்லை.

“தெளிவாக முடிகிற நன்மைகளை நீங்களாகக் குழப்பி விடாதீர்கள்” என்று மறுத்தான் அவன்.

“விடிவதற்குள்ளேயே நமக்கு ஒளி பிறக்கும்” என்று மேலும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் சொன்னான் அவன். இளையநம்பிக்கு அவனுடைய உறுதி வியப்பளிப்பதாக இருந்தது. ஆயினும் அவன் பொறுமையாயிருந்தான்.

அழகன் பெருமாள் நம்பியபடியே நடந்தது. சிறிது, நேரத்தில் சந்தனம் அறைக்கும் அறையில் நிலவறையின் மறுபுறம் இருந்து கல் புரட்டப்படும் ஒலி வரவே குறளன், இளையநம்பி, அழகன் பெருமாள் மூவரும் அங்கே விரைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/145&oldid=715352" இலிருந்து மீள்விக்கப்பட்டது