பக்கம்:நித்திலவல்லி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

நித்திலவல்லி / முதல் பாகம்



முதலில் தூக்கிய வலது பாதத்தை ஊன்றிக் கொண்டு, இடது பாதத்தைத் தூக்கி அதிலிருந்த செம்பஞ்சுக் குழம்பு எழுத்துக்களையும் அவர்களுக்குக் காண்பித்தாள் அவள். ‘நான் இப்போது முழு வெற்றியில் கால் ஊன்றி நிற்கிறேன்’ என்று இரத்தினமாலை புன்னகையோடு கூறிய சொற்களின் முழுப்பொருளும் இப்போது அவர்களுக்குத் தெளிவாக விளங்கியது.

இளையநம்பி நன்றி தொனிக்கும் குரலில் அவளை நோக்கிக் கூறினான்: “கைகளில் சுமந்து சென்ற கேள்விகளுக்குக் கால்களில் விடைகள் கிடைத்திருக்கின்றன.”

“ஆம்! இந்த மாறுதலுக்குக் காரணம் இருக்கிறது. நேற்றிரவு நான் அரண்மனையில் தங்கி, என்னுடைய கைகளில் இங்கிருந்து சுமந்து சென்ற எழுத்துக்களைக் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி அவர்கள் அறிந்து கொண்டதும், மறுமொழியை எழுதுவதற்காகக் கைகளைக் கழுவிவிட்டு மீண்டும் நீட்டினேன். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக அந்தப்புரத்தைச் சேர்ந்த களப்பிர நங்கை ஒருத்தி வந்து சேர்ந்து விட்டாள். வந்ததோடு மட்டுமல்லாமல் அவள் என்னருகே நெருங்கி-

“நள்ளிரவுக்கு மேல் ஏற்கெனவே அலங்கரித்துக் கொண்டிருந்த அலங்காரங்களை அழித்து விட்டுப் புதிதாகச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கொள்ள என்ன அவசரம் இரத்தினமாலை?" என்று வினாவி விட்டாள். வினாவிய பின்பு, அந்தக் களப்பிரப் பெண் உடனே எங்களை விட்டு அகலவில்லை. ஏதோ எங்களைச் சந்தேகப்படுகிறவள் போல், நெடுநேரம் எங்களோடு தொடர்பாகவும், தொடர்பின்றியும் எதை எதையோ உரையாடிக் கொண்டிருந்தாள். அந்த உரையாடலின் நடுவே, ‘அடி இரத்தினமாலை! இந்த அரண்மனையில் உன்னால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட தமிழ்ப் பணிப் பெண்கள் அனைவரும் உன் மேல் நிறைய விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உனக்கு அலங்கரிக்கும் போதும் உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசும் போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/151&oldid=945328" இலிருந்து மீள்விக்கப்பட்டது