பக்கம்:நித்திலவல்லி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15


மென்று கூடத் தோன்றியது. நன்றாக இருட்டுவதற்குள் பெரியவரைச் சந்தித்துவிட வேண்டு மென்ற முனைப்பினால் அவன் கால்கள் விரைந்தன.

மிக அருகே யாரோ ஆண்பிள்ளை விரைவாக நடந்து வரவே அவள் திரும்பினாள். தான் நினைத்துக் கற்பனை செய்திருந்ததைவிட அவள் பேரழகியாக இருந்ததைக் கண்டு அந்த வியப்பில் பேசவேண்டிய உரையாடலுக்கு வார்த்தைகள் பிறவாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றுவிட்டான் இளையநம்பி. ‘ஒரு தங்க நாணயம் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசமாகத்தான் இருக்க முடியும்’-- என்று தனக்குள் வியப்போடு சொல்லிக்கொண்டான் அவன். பின்பு அவளை அணுகி வினவினான்:--

“பெண்ணே! எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும்! மதுராபதி வித்தகரின் இருப்பிடம் தெரிய வேண்டுமென்று அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்வூரில் ஒருவராவது அதைச் சொல்லமாட்டேன் என்கிறார்கள்...”

அவனுக்கு மறுமொழி கூறாமல் புன்முறுவல் பூத்தாள் அந்தப் பெண். விளக்கொளியில் அந்தப் புன்னகையின் அதே வசீகரம் அவள் கண்களிலும், கன்னங்களிலும் பரவினாற் போல் அத்தனை அழகாயிருந்ததை இளையநம்பி கண்டான். சிரிப்பு என்ற வசீகர வனப்பைக் கண்களிலும், கன்னங் களிலும்கூட நிறைத்துக் கொண்டு நிற்பதுபோல் எதிரே நின்றாள் அவள். சிரிக்கும்போது தானே புன்னகையாக மலர்வதுபோன்ற அவள் தோற்றமும் வனப்பும் இளைய நம்பிக்கும் பிடித்திருந்தாலும் தன்னுடைய வினாவுக்கு அவள் இன்னும் மறுமொழி கூறவில்லை என்பது வருத்தத்தை அளித்தது. சற்றே சினமும் மூண்டது.

“அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது.”

“முன்பின் தெரியாத அந்நிய ஆடவர்களுக்கு வழி காட்டுவதற்காகத்தான் மோகூரில் அழகிய பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/16&oldid=714871" இலிருந்து மீள்விக்கப்பட்டது