பக்கம்:நித்திலவல்லி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

167



அவர்கள் இருந்தார்கள். வருகிறவன் அந்நியனாயிருந்து, அவன் இந்த வழியாக வெளியேறி, இப்படி ஒரு வழி இருப்பதைக் கண்டு உயிர் பிழைத்து விடுவானாயின், அப்புறம் தாங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மின்வெட்டும் நேரத்தில் இளையநம்பி ஒரு திட்டமிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில், கருமரத்தில் செய்த இரும்புப் பூண் பிடித்த உலக்கைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி அழகன் பெருமாளுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு, இன்னொன்றைத் தான் கையில் எடுத்துக் கொண்டு சந்தனக்கல்லை மேற்புறம் இருந்தபடியே மெல்லத் தூக்கி நகர்த்தும்படி குறுளனுக்கும் இரத்தின மாலைக்கும் சைகை செய்தான் இளையநம்பி. அவன் திட்டப்படி வந்திருப்பவனோ, வந்திருப்பவர்களோ எவ்விதமாகவும் உயிர் தப்பமுடியாது. இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டுக் களப்பிரர்களிடம் அகப்பட்டு விட்டால், தங்களுடைய எல்லா வழிகளும் அடைபட்டு விடும் என்ற இறுதிப் பாதுகாப்பு உணர்வின் எல்லையில், அவர்கள் அப்போது மிக எச்சரிக்கையோடு இருந்தார்கள். கீழே இருப்பவன் ஏதோ வலியில் அரற்றுவது போன்ற தீன ஒலிகளுடன் மூச்சு இரைக்க, இரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர்கள் வெளிப்புறம் கேட்க முடிந்தது. வந்திருப்பவன் நிலவறை வழிக்கு முற்றிலும் புதியவனாக இருந்தாலொழிய, இப்படி மூச்சு இரைக்க நேருவது சாத்தியமில்லை என்றும் அநுமானம் செய்தார்கள் மேலே இருந்தவர்கள்.

எதிரெதிர்ப் பக்கங்களில் உலக்கைகளோடு அழகன் பெருமாளும், இளையநம்பியும் நின்று கொண்டபின், மேற்புறம் மூடியிருந்த சந்தனக்கல்லை மெல்ல நகர்த்தி எடுத்தார்கள் குறளனும் இரத்தினமாலையும். ஓரிரு கணங்கள் மயான அமைதி நிலவியது அங்கே. கீழே நிலவறைத் துவாரத்தின் இருளிலிருந்து யாரும் மேலே வரவில்லை. ஆனால் உட்புறம் மூச்சு விடுகிற ஒலி கோரமாகக் கேட்டது. மேற்பக்கம் கைகளில் உலக்கைகளோடு நின்ற இருவரும் இந்த வழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/168&oldid=945310" இலிருந்து மீள்விக்கப்பட்டது