பக்கம்:நித்திலவல்லி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

191


எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்...செய்வாய் அல்லவா?”

“நம்மைப் போல் அவர்களும் களப்பிரர் ஆட்சியை எதிர்ப்பவர்கள். பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைக் குத்தலை வணங்குகிறவர்கள். தென்னவன் மாறன் சிறு மலைக்காட்டில் இருப்பவன். மல்லன் திரு மோகூர்ப் பெரிய காராளரின் அறக்கோட்டத்தில் இருப்பவன். எல்லோரும் நம்மவர்கள். பாண்டிய மரபு சிறப்படையப் பாடுபடுகிறவர்கள். அவர்களைச் சிறை மீட்பது பற்றிய காரியங்களை நானே செய்கிறேன். உங்கள் ஒத்துழைப்பும், உறுதுணையும் எனக்கு இருந்தால் போதும் ஐயா!” என்றான் அழகன் பெருமாள். அவ்வளவில் இரத்தினமாலை அவர்களை உண்பதற்கு அழைத்தாள். இரவு நெடுநேரமாகி யிருந்ததனால் உண்ணும் வேளை தவறியிருந்தது. நிலவறைக் காவலுக்காகச் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்த குறளனுக்கும் இரத்தக் காயங்களுடன் கட்டிலில் கிடந்த தேனூர் மாந்திரீகனுக்கும் பணிப் பெண்கள் அங்கேயே உண்கலங்களில் உணவு எடுத்துச் சென்று படைத்தனர்.

இளையநம்பியையும், அழகன் பெருமாளையும் அமரச்செய்து இரத்தினமாலையே பரிமாறினாள். இளையநம்பி போதும் போதும் என்று கைகளை மறித்த பின்னும் நெய் அதிரசங்களை அவன் இலையில் படைத்தாள் இரத்தின மாலை.

“இரத்தினமாலை! இதென்ன காரியம் செய்கிறாய்? அதிரசங்களை நான் உண்ண வேண்டுமா? அல்லது அதிரசங்கள் என்னை உண்ண வேண்டுமா? வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை! வீரர்கள் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள். மற்றவர்களோ உண்பதற்காகவா வாழ்கிறார்கள். இந்த உலகில் உணவை உண்ணுகிறவர்களும் உண்டு; உணவால் உண்ணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிக் கலத்தில் மிகையாகப் படைப்பதன் மூலம் நீ என்னைப் பாராட்டுகிறாயா, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாயா என்பது புரியவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/192&oldid=716220" இலிருந்து மீள்விக்கப்பட்டது