பக்கம்:நித்திலவல்லி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

நித்திலவல்லி / முதல் பாகம்



‘நானும், காராளரும், மற்றவர்களும் நினைத்துத் திட்டமிட்டதும், எதிர்பார்த்ததும் வேறு; நடந்திருப்பது வேறு. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டது. உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று யானைப் பாகன் அந்துவன் மூலம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை இந்த ஓலை மூலம் மேலும் விளக்குவதுதான் என் நோக்கம். பொதுவாக நான் எழுத்தாணி பிடித்து ஓலைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் நீண்ட வார்த்தைகளால் பெரிதாக எழுதுவது வழக்கமில்லை. அதிக வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். திருமோகூர்ப் பெரியகாராளர்கள் என் அருகே இல்லாததால், நானே எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிகம் எழுத வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை.

‘அன்று பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையின் சித்திரவண்டிகளின் பூங்குவியலில் மறைந்து நீ கோநகருக்குள் நுழைந்த போது எல்லாம் சோதனை இன்றி முடிந்து விட்டதாகவே நீயும் பிறரும் நினைக்கிறீர்கள். அப்போது உங்கள் வண்டிகளைச் சோதித்த இரு பூதபயங்கரப்படை வீரர்களின் ஒருவனின் ஐயப்பாட்டாலும், வெள்ளியம்பலத்தருகே அடுத்தடுத்துப் பிடிபட்ட இருவராலும் எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்ட போதே கோநகரின் கோட்டை மதில்களுக்குள்ளிருந்து நமது வலிமையும் அகற்றப் பட்டுவிட்டது. பிடிபட்ட ஒற்றர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கும். களப்பிரர்கள் அவர்களை யாத்திரீகர்கள் என்று நம்புவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் அந்த ஆயுதங்களே தடையாகியிருக்கும். புறத்தே வெளிப்பட்டுத் தெரியாததும், அங்கியிலும் இடுப்புக் கச்சையிலும் மறைந்துவிடக் கூடியதுமான, சிறுசிறு வாள்கள் ஒவ்வொரு யாத்திரீகனிடமும் இருக்கலாம். நல்ல வேளை சூழ்நிலை பொருந்தி வரவில்லை என்றால் யாத்திரீகர்களாகவே உள்ளே நுழைந்தது போல் யாத்திரீகர்களாகவே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/207&oldid=945273" இலிருந்து மீள்விக்கப்பட்டது