பக்கம்:நித்திலவல்லி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

நித்திலவல்லி / முதல் பாகம்



பணிகளை மறுக்காமற் செய்திருந்தேன். மேலும் ‘காராளருடைய உழுபடைகளுக்கு எல்லாம் கலப்பைக்குக் கொழு அடிப்பவன் என்ற முறையில் அவரைப் பார்க்க வேண்டுமே தவிரச் சொந்த முறையில் அவரிடம் எனக்கு எந்த அரசியல் வேலையும் இல்லை! சந்தேகம் கொள்ளாமல் என்னை அவரைக் காண விட வேண்டும்’ என்று அவர்களிடம் மன்றாடினேன். நான் அவ்வளவு மன்றாடியபின் ‘கால் நாழிகைப் போது அவரைக் காணலாம்’ என்று அவர்கள் இணங்கினார்கள். நான் அவ்வாறு பெரிய காராளரைச் சந்தித்தபோது, அவருடைய திருக்குமாரி செல்வப் பூங்கோதையும் உடனிருந்தாள். நான் அந்த மாளிகையிலிருந்து வெளியேறும்போது, பெரியகாராளர் மகள் என்னருகே வந்து ‘இந்த விஷயம் என் தந்தைக்கோ, பெரியவருக்கோ தெரியக்கூடாது! தயைகூர்ந்து நான் தரும் ஓலையைத் திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரிடம் சேர்த்துவிட முடியும் அல்லவா?’ என்று பரம ரகசியமாக என்னிடம் உதவி கோரினாள். அதற்கு, ‘அம்மா! இப்போது நான் கூடல் மாநகருக்குச் செல்லப் போவதில்லை. இரவோடு இரவாகப் பயணம் செய்து, பெரியவர் மதுராபதி வித்தகர் புதிதாக அஞ்ஞாத வாசம் செய்யும் இடத்திற்கு வரச் சொல்லிக் கட்டளை வந்திருக்கிறது. மீண்டும் எப்போதாவது நான் கூடல் மாநகருக்குச் செல்ல வேண்டியதாக நேர்ந்தால் அப்போது உனக்கு இந்த உதவியைச் செய்வேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன். பெரியவரைச் சந்தித்த பின், அவரே தம்முடைய ஓலையை முதலில் பெரியகாராளரைப் படிக்கச் செய்த பின்புதான், மதுரை மாநகருக்கு எடுத்துச் சென்று தங்களிடம் ஓலையைக் காண்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனால் நான் மீண்டும் திருமோகூரை அடைந்து, அரிய முயற்சி செய்து கட்டுக் காவலில் இருந்த பெரியகாளாரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் தந்தைக்கும் தெரியாமல் இந்த ஓலையை என்னிடம் கொடுத்து உங்களிடம் சேர்த்துவிடச் சொல்லி அந்தப் பெண் கண்களில் நீர் நெகிழ வேண்டினாள். அந்தப் பெண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/213&oldid=945269" இலிருந்து மீள்விக்கப்பட்டது