பக்கம்:நித்திலவல்லி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

221



தாபங்களையும் தவிப்புக்களையும் கற்பனையிலாவது உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

இன்னொரு செய்தி! யாருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் தங்கள் மேல் அடியாள் கொண்டிருக்கும் இந்தப் பிரேமையைப் பற்றியும், இந்த மடலைப் பற்றியும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மட்டும் தெரியவே வேண்டாம். நெகிழ்ந்த உணர்வுகளையும், மனிதர்களுக்கு இடையேயுள்ள ஆசாபாசங்களையும் அவர் அதிகம் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிகளை மதிக்க மாட்டார் அவர். இதனால் எனக்கு அவரிடமுள்ள பக்தியோ, மதிப்போ குறைந்து விட்டது என்று பொருளில்லை. கல்லின் மேல் விழும் பூக்களைப் போல் பிறருடைய மென்மையான உணர்வுகளைத் தன் சார்பால் கடுமையாகவே ஏற்று, வாடச் செய்யும் அவரது மன இறுக்கம்தான் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய இந்த அநுபவம் அவரைப் பொறுத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்படாமலும் போயிருக்கலாம். ஆனால் இது நம்மோடு இருக்கட்டும் என்பதற்காகவே இதனை இங்கே எழுதினேன். மறுபடி உங்களை எப்போது காணப் போகிறேனோ? என் கண்கள் அதற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றன. தவம் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த ஓலையை உங்களிடம் எப்படி அனுப்பப் போகிறேனோ தெரியவில்லை. இது உங்களிடம் வந்து சேருமுன் திருமோகூரிலும், கோநகரிலும் என்னென்ன மாறுதல்கள் நேருமோ? அதுவும் தெரியவில்லை. உங்கள் அன்பையும் அநுக்கிரகத்தையும் எதிர்பார்த்து இங்கு ஒரு பேதை ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும்...'-

இப்பகுதியை அவன் படித்துக் கொண்டிருந்த போது மாளிகைப் பணிப் பெண் வந்து அவசரமாகக் கூப்பிடுவதாய்க் குறளன் உள்ளே வந்து தெரிவித்தான்.

இளையநம்பி கையிலிருந்த ஓலைக் கற்றையைப் பார்த்தான். படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதமிருந்தது. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/222&oldid=945267" இலிருந்து மீள்விக்கப்பட்டது