பக்கம்:நித்திலவல்லி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2. மாவலி முத்தரையர்

ன்றாக மழித்து முண்டனம்[1] செய்து மின்னும் தலையும் நீண்டு தொங்கும் காதுகளும், கண்களின் கீழேயும் நடு நெற்றியிலும் கோரமாகத் தழும்பேறிய கருமையுமாக மாவலி முத்தரையர் எழுந்து நின்றார். ஒரு குருவுக்குரிய சாந்தமோ, அமைதியோ அவர் கண்களில் இல்லை. நெற்றியிலும், கண்களின் அடியிலேயும் இருந்த கறுப்புத் தழும்புகள் வேறு, மேலும் அந்த முகத்தைக் கொடூரமாகக் காண்பித்தன. பார்த்த மாத்திரத்திலேயே ஒரு கபட சந்நியாசிக்கு முன் நிற்கிறோம் என்று உணர வைத்து விடும் அளவுக்கு அவர் தோற்றமும் அவர் மேற்கொண்டிருந்த புனிதமான கோலமும் முரண்பட்டன. அவர் பேசலானார்:-

“கலியா! இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே உன்னுடைய பூத பயங்கரப் படையினர் மூலம் நீ தெரிந்து கொண்டிருப்பதை விட அதிகமான செய்திகளை நான் கூற முடியும் என்று நினைக்கிறேன். தென் பாண்டி நாட்டு நெற்கழனிகளில் நெல்லும், கொற்கைத் துறைச் சிலாபங்களில்[2] முத்துகளும், பொதியமலையில் சந்தனமும், தேக்கும், அகிலும் விளைகின்ற மகிழ்ச்சியில், என்றோ கைப்பற்றிய இந்தப் பாண்டிய நாட்டைக் கவலையில்லாமல் ஆண்டு கொண்டிருக்கலாம் என்று நீயும், நானும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தம்மைச் சுற்றி உள்நாட்டிலேயே உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களையும், பகைகளையும் நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதை மிக நன்றாக உணர்ந்திருக்கிறேன்.”


  1. மொட்டைத் தலை
  2. முத்துக் குளிக்கும் இடம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/239&oldid=946417" இலிருந்து மீள்விக்கப்பட்டது