பக்கம்:நித்திலவல்லி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

243



புழுங்கியது. நெருப்பாய்க் கொதிக்கிற பகைமையும், குரோதமுமே வந்து எதிரே வடிவு கொண்டு நிற்பது போல் அப்போது களப்பிரக் கலிய மன்னனின் முன்னிலையில் தோன்றினார் மாவலி முத்தரையர்.

அவருடைய முன்னிலையில், அப்போது நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகர் எதிர்ப்பட்டால், தாவிப் பாய்ந்து கழுத்தை நெறித்துக் கொன்று விடுவார் போன்று மாவலியார் அவ்வளவு கோபமாயிருந்தார். அந்த அரசவையில் அப்போது, மாவலி முத்தரையரை எதிர்த்துப் பேசவோ வாதம் செய்யவோ துணிந்தவர்கள் யாருமில்லை.

அவர் போர்த்திக் கொண்டிருந்த துறவுக் கோல உடை கூட அந்த வேளையில் உடையாகத் தோன்றாமல் அவரது சரீரமே கோபத்தால் கனல் பற்றிக் கொழுந்து விட்டு எரிவது போல் தோற்றமளித்தது. மதுராபதி வித்தகர் மேல் உள்ள ஆறாச் சினத்தைத் துறவு நிலைக்குப் பின்னும் விட முடியாத அளவிற்கு அது ஆழமானது என்பதை மாவலி முத்தரையரின் முகத்திலிருந்து அறிய முடிந்தது. அறிவுப் பகை துறவியானாலும் நீங்காது போலிருக்கிறது. அதே சமயத்தில், மதுராபதி வித்தகர் பற்றி மாவலி முத்தரையர் கூறிய சினம் மிக்க வார்த்தைகளின் ஊடே கூட, ‘உன்னளவு நான் உயரமுடியாத படி நீ இணையற்ற உயரத்துக்கு அறிவிலும் சாதுரியத்திலும் வளர்ந்து நிற்கிறாயே’ --என்று மதுராபதி வித்தகரை நோக்கிப் பெறாமைப்படும் தொனியே புலப்பட்டது. மதுராபதி வித்தகரின் மேல் முதலில் மதிப்பு ஏற்பட்டு, அந்த மதிப்பே நாளடைவில் ஆற்றாமையாகவும், கோபமாகவும், பொறாமையாகவும், மாறி உருவெடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. மாவலி முத்தரையர் முதலில் ஏலாமையாலும், அதன் பின்பு சினத்தினாலுமே கனன்றார் என்பதையும் அநுமானிக்க முடிந்தது. தன் பகையை அரசியற் பெரும் பகையாக மாற்றவும் அவரால் இயன்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/242&oldid=946356" இலிருந்து மீள்விக்கப்பட்டது