பக்கம்:நித்திலவல்லி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

245



ஆனால், செல்வாக்கும், அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்த மட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.”

இவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும் காதும் வைத்தாற் போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள்? நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித் தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே?” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:-

“யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர்? அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விட முடியும்? அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்?”

“கலியா? உன்னுடைய வினாவுக்கு ஓரளவு குறிப்பாகவே நான் மறுமொழி கூற முடியும். இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பலவற்றை நான் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூற முடியாமலிருப்பதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் என் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அந்த மதுராபதி வித்தகனை, வாளினால் வெல்ல முடியாது! ஓர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு, இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனை விடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்தி சாதுரியமோ, அரச தந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/244&oldid=946359" இலிருந்து மீள்விக்கப்பட்டது