பக்கம்:நித்திலவல்லி.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

251


இவனைப் போன்று இயங்குகிறவர்களையும், ஒவ்வொருவராகப் பிடிக்க வேண்டும்.“

“ஆம், அந்த தென்பாண்டி மதுராபதி வித்தகன் உட்பட அனைவரையும் பிடிக்க வேண்டும்.“

“அவசரப்படாதே கலியா! காடைகளைத்தான் வலையில் பிடிக்கலாம், சிங்கங்களை வலையில் பிடிக்க முடியாது.“

“நன்மை தருவார் குலத்துக் கிழச் சிங்கம் அவ்வளவு சுலபமாக உனக்குக் கிடைத்து விடாது.“ இதைச் சொல்லும் போது மாவலி முத்தரையரின் குரல் சலனமில்லாத உறுதியுடன் இருந்தது. அவர்கள் பாலியில் பேசிக் கொண்டிருந்தார்கள். பதினாறடி வேங்கை வரிப் புலியை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நிறுத்தியது போல் தென்னவன் மாறன் சீற்றம் கனலும் விழிகளோடு நின்று கொண்டிருந்தான்.

திடீரென்று பூத பயங்கரப் படைத் தலைவனை நோக்கி “அந்தப் புலித்தோல் அங்கியைக் கிழித்தெறி! சிறைப்பட்டிருப்பவனுக்கு அங்கி என்ன கேடு“ என்பதாக இடி முழங்கும் குரலில் இரைந்தான் கலிய மன்னன்.

அந்தக் காட்டு வேங்கையை நெருங்கவே பயமாயிருந்தாலும், அதன் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டதால், நீங்கிய பயத்தோடு அங்கே நெருங்கித் தன் வாளால் அங்கியை அகற்றினான் பூத பயங்கரப் படைத்தலைவன். அங்கி கீழே விழுந்த போது, அந்த வீரனின் பரந்த மார்பில் வாள் சற்றே அளவுக்கு மீறிப் பதிந்து விட்டதால், குறுக்கே ஒரு செங்கோடு இழுத்தது போல் இரத்தக் கீறல் தெரிந்தது.

இரண்டு தினங்களாக உண்ணாததால், தளர்ந்திருந்த தென்னவன் மாறனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. நடுமார்பில் இரத்தக் கீறலும், கால்களிலும், கைகளிலும் இரும்புச் சங்கிலிகளின் கனமுமாக அவனை