பக்கம்:நித்திலவல்லி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

261


மந்திராலோசனைக் கூட்ட முடிவில், தென்னவன் மாறன் தன் நினைவிழந்து மயங்கி விழுந்தவுடனே, அவனை ஒற்றறியக் காம மஞ்சரியிடம் விட்ட பின் மற்ற மூவரும் மீண்டும் சிறைக் கோட்டத்துக்கே அனுப்பப்பட்டு விட்டார்கள். எல்லைகளில் படை பலத்தைப் பெருக்கி வைத்திருக்குமாறு மீண்டும் நால்வகைத் தானைத் தலைவர்களையும் கலிய மன்னன் கேட்டுக் கொண்டான். அவ்வளவில் மந்திராலோசனைக் குழுவினர் கலைந்தனர். சிறைப் பட்டிருந்த நால்வரில் தென்னவன் மாறனைப் பற்றி மட்டுமே கலிய மன்னனுக்கும், மாவலி முத்தரையருக்கும் அதிகமான பயம் ஏற்பட்டிருந்தது.

"நாளைப் பொழுது விடிந்தால், அவனைச் சிரச்சேதம் செய்யப் போகிறோம். அதற்குள்ளே அவனை மயக்கி வசப்படுத்தி அவனிடம் இருந்து அறிய வேண்டியவற்றை அறிய வேண்டும்" என்பதாகக் காம மஞ்சரியிடம் கட்டளையிடுமாறு பூத பயங்கரப் படைத் தலைவனிடம், கலிய மன்னர் கூறிய போது அரசகுரு மாவலி முத்தரையர் குறுக்கிட்டார்:

“அப்படிச் சொல்லாதே கலியா! இவனை உடனே கொன்று அழித்து விடுவதால், நமக்குப் பயன் இல்லை. நான் முன்பே உன்னிடம் சொல்லியது போல் கிடைத்த பறவையை வைத்துத் தப்பி விட்ட பறவைகளைப் பிடிக்க வேண்டும்.”

“பிடிக்கலாம்! ஆனால் காம மஞ்சரியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! நீங்கள் காலக் கெடு வைத்துத் துரிதப் படுத்தினால் அன்றி, அவளுடைய சாகஸம் விரைந்து பயன்படாது. ஆகவே, அவளிடம் நாளை வைகறையிலேயே, நம்மிடம் சிறைப்பட்டிருக்கும் இந்தப் பாண்டிய குல இளைஞன் சிரச்சேதம் செய்யப்படுவான் என்று கூறினால்தான் நல்லது” என்றான் கலியன்.

“கூற வேண்டியவற்றை எல்லாம் காம மஞ்சரியிடம் மிகவும் தந்திரமாகக் கூறியிருக்கிறேன். பாண்டிய மரபின் உறுதுணையானவர்களில் இவன் ஏதோ ஒரு விதத்தில், மிக மிக இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். இதே சங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/260&oldid=946377" இலிருந்து மீள்விக்கப்பட்டது