பக்கம்:நித்திலவல்லி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

283


சிலம்பாற்று நீரில் மூழ்கி எழுந்து ஈர உடையோடு, அந்த மலையின் ஒரு பகுதியில் மறைந்திருந்த பெரியவரைக் காணப் புறப்பட்டான் அவன்.

முதன்முறை அவன் பெரியவரைக் காண அங்கு வந்த போது, அவர் புண்ணிய சரவணம் என்ற புகழ் பெற்ற பொய்கைக்கும் இட்டசித்தி, பவகாரணி என்ற மற்றப் பொய்கைகளுக்கும் அப்பால் மலை உச்சியில் பிலம்[1] போலிருந்த குகைகளில் ஒன்றில் மறைந்திருந்தார். இப்போதும் அவர் அங்கேதான் இருப்பார் என்று உறுதி கூற முடியாது. எதிரிகளிடம் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருமோகூரிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இடம் மாறியது போல் இந்தத் திருமால் குன்றத்திலும் அவரே அடிக்கடி இடம் மாறலாம் என்ற குறிப்பை முதலில் இங்கு வந்து அவரைச் சந்தித்த தினத்தன்று அவரோடு பேசிய போதே புரிந்து கொண்டிருந்தான் கொல்லன். இருபுறமும் மேல் நோக்கி ஓங்கிய மலைப் பக்கங்களின் நடுவே கணவாய் போன்ற அந்தப் பள்ளத்தின் முனையில்தான் சிலம்பாறு என்ற மலைமகளின் செல்வி,தரையில் சிலம்பு ஒலிக்க இறங்குகிறாள். அந்த இடத்தில் நின்று, நீராடிய ஈர உடையோடு அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, கீழ்ப் பக்கம் மேலே மலைச் சரிவில் பாண்டியர்களைச் சேர்ந்த மதுராபதி வித்தகரின் ஆபத்துதவிகள் இருவர் விரைந்து தன்னை நோக்கி இறங்கி வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டதும், பெரியவரின் இருப்பிடத்தைத் தேடுவது பற்றிய கவலை அவனிடமிருந்து அகன்றது. புறப்பட இருந்தவன், அவர்களுக்காக நின்றான்.

நீராடும் போதும் தவறி விடாமல் பத்திரமாகத் தனியே எடுத்து வைத்திருந்த இளையநம்பியின் தாழைமடற் சுருளை, மேலும் ஒரு தேக்கு இலையைத் தேடிச் சுருட்டி வைத்துக் கொண்ட பின், அவன் அவர்களை எதிர் கொண்டான்,


  1. ஆழமான பாறைப் பிளவு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/282&oldid=946404" இலிருந்து மீள்விக்கப்பட்டது