பக்கம்:நித்திலவல்லி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


11. இரும்பும் இங்கிதமும்

பெரியவரின் ஆணையைப் பெற்றுத் திருமோகூர் திரும்புவதற்காகச் சிறிது தொலைவு வரை மலைச் சரிவில் கீழிறங்கி வந்து விட்ட கொல்லனை, மறுபடியும் இரண்டு ஆபத்துதவிகள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர்.

"இரவெல்லாம் வழி நடந்து ஒடி வந்திருக்கிறாய்! இங்கு வந்ததும் வராததுமாக, மறுபடி திருமோகூருக்கு ஒட நேர்ந்திருக்கிறது. பசியாறுவதைப் பற்றிய நினைப்பே உனக்கும் இல்லை. நாங்களும் மறந்து விட்டோம். இதோ இவற்றைப் போகிற வழியில் சிலம்பாற்றங்கரையில் அமர்ந்து உண்டு விட்டுப் போ", என்று வேக வைத்த பனங்கிழங்குகள் சிலவற்றையும், நாலைந்து கதலிக் கனிகளையும், இரண்டு விளாம்பழங்களையும் அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர் அந்த ஆபத்துதவிகள். அவனும் அவற்றை வாங்கித் தன் மேலாடையில் முடிந்து கொண்டான். அவர்கள் அப்படித் தேடி வந்து தன் பசியை எண்ணிக் கவலையோடும், சிரத்தையோடும் நடந்து கொண்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

புதிய இடத்தில் தங்களுக்கு என்று சிரமப்பட்டுச் சேகரித்து அவித்த பனங் கிழங்குகளில் சிலவற்றையும், பழங்களையும் துரத்தி வந்து தந்த ஆபத்துதவிகளை அவன் மனம் வாழ்த்தியது. நன்றியோடு பாராட்டியது.

‘களப்பிரர்கள் நாட்டைத்தான் பாண்டியர்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடிந்ததேயொழியப் பிறர்க்குதவும் பண்பு, பிறர் பசியை அறிந்து உணவிடும் பெருந்தன்மை ஆகிய குடிப் பண்புகளை ஒருபோதும் பறிக்க முடியாது’ என்று இறுமாப்போடு தோள்கள் விம்மி எழ, எண்ணினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/286&oldid=946409" இலிருந்து மீள்விக்கப்பட்டது