பக்கம்:நித்திலவல்லி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



விண்ணவர் அமுதைப் பருகுவது போல் விரும்பிப் பருக ஏற்ற சிலம்பாற்று நீரோடு ,அந்தச் சிறிய அளவு உணவை உண்டு முடிந்த பின் நடையைத் தொடர்ந்தான் அவன். கைகளிலும் வாயிலும் விளாம்பழ வாசனை இன்னும் தொடர்ந்தது. இன்னும் பல நாட்கள் தொடர்ந்து தங்க நேரிட்டாலும், விளாம்பழங்களும் நல்ல மலை வாழைக்கனிகளும் அந்த மலையில் போதுமான அளவு கிடைக்கும் என்று தோன்றியது. அடிவாரத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கவும் வழி இருந்தது. மிகப் பல ஆண்டுகளாக மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகளும், முனை எதிர் மோகர்களும், வாய்க்குச் சுவையாக உண்ண இயலாமல் இப்படித்தான் அங்கங்கே கிடைத்த உணவுகளை உண்டு நிறைவு கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தனர். விருந்துகளையும், உண்டாட்டுக்களையும், ஆள்பவர்கள் அநுபவிக்க முடியாது என்று புரிந்திருந்தும், பாண்டிய வீரர்கள் தியாக மனப்பான்மையோடு தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பணி புரிந்து வந்தனர். நாட்டை விடுவிக்கும் வேட்கையில், பசியையும் ருசியையும் கூட மறந்திருந்தனர். பாண்டியர் குடிப் பண்பான அதே கட்டுப்பாடு திருமோகூர்க் கொல்லனிடமும் இருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து வந்து கொடுத்து விட்டுப் போகவில்லையென்றால், அவன் உணவையும் மறந்து விட்டே பயணத்தைத் தொடரும்படி ஆகியிருக்கும். ஞாபகமாகத் தன் பசியை நினைவு கூர்ந்து, தேடித் துரத்தி வந்து தனக்குக் கொடுத்து விட்டுப் போன அந்த ஆபத்துதவிகள், தம் அளவில் இன்னும் பசியாறினார்களோ, இல்லையோ என்று சிந்தித்த போது அவன் உள்ளம் உருகியது.

சில நாட்களுக்கு முன்பு திருமோகூரிலிருந்து இடம் மாறியவுடன் பார்த்திருந்ததையும் விட, இன்று திருமால் குன்றில் பெரியவர் மதுராபதி வித்தகரின் முகம் இன்னும் ஒளி மிகுந்து காட்சி தந்ததாகவே அவனுக்குத் தோன்றியது. களப்பிரர்களால் விளைந்த புதிய சோதனைகளும் தப்பித்துக் கொள்வதற்காக ஒடி இடம் மாற நேர்ந்ததும் அவரைச் சிறிதும் கலங்கவோ, தளரவோ விட்டு விடவில்லை என்பதை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/287&oldid=946427" இலிருந்து மீள்விக்கப்பட்டது