பக்கம்:நித்திலவல்லி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

305


மட்டும் விரும்பும் ஒருவனை வழி நடத்திப் போவது பெரியவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அதை அவன் செய்தாக வேண்டியிருந்தது.


14. நவ நித்திலங்கள்

கொற்கை நகரத்திலிருந்து வந்திருந்த புதிய இளைஞனும், கொல்லனும் சிலம்பாற்றின் கரையை அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மலைச்சரிவில் ஆபத்துதவிகள் தீப்பந்தங்களுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இருளில் அந்த மலைக் கணவாயில் காற்று சுழித்து வீசிக் கொண்டிருந்தது. மேலே மலைப் பகுதிகளில் எங்கோ மழை பெய்திருந்ததனால், சிலம்பாற்றின் ஓட்டத்திலே வெள்ளமும், வேகமும் கூடியிருந்தன. இருளிலே அந்த மலைப் பிளவிலே பல்லாயிரம் போர் வீரர்கள் ஒரு சமயத்தில் உற்சாகக் குரல்களை எழுப்பிக் கொண்டே, விரைந்து பாய்ந்தோடுவதைப் போன்ற ஆரவாரத்தோடும், ஓசையோடும் சிலம்பாறு துள்ளிக் குதித்துச் சுழன்று, சுழித்துப் பொங்கிப் புடைத்து, ஒசையெழ ஒடிக் கொண்டிருந்தது. பேயாட்டம் போடுவது போல் மரங்கள் தலைகள் சுழலக் காற்றில் ஒசையிட்டு ஆடிக் கொண்டிருந்தன. கோபம் கொண்ட தேவர்கள் கரிய வானத்தில் நீள நீளமான வெள்ளி வாள்களால் தாறு மாறாக வீசிப் போட்டாற் போல் மின்னல்கள் சொடுக்கி மறைந்தன. ஊசியால் குத்துவது போலக் குளிர்ந்த காற்று உடலில் பட்டு உறைத்தது.

நி.வ - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/304&oldid=946521" இலிருந்து மீள்விக்கப்பட்டது