பக்கம்:நித்திலவல்லி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

373


கினான். நான் பாண்டிய குலத்து உறுதுணையாளன் என்ற அந்தரங்க உண்மை மாவலி முத்தரையனுக்குத் தெரியும். அவன் என் பகைவனாக மாறிய பின் சமயம் பார்த்து, அதை அவன் களப்பிரப் பேரரசுக்கு அறிவித்து என்னை ஒழிக்க முயல்வானோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகவே, அந்தப் பகைமை ஏற்பட்ட நாள் முதல் நான் தலை மறைவு கொள்ள நேரிட்டு விட்டது. இப்படி மறைந்து வசிக்கவும், பாண்டியர் வெற்றிக்குத் திட்டமிடவும், ஏற்பாடுகள் செய்யவும் நேர்ந்தது கூட ஒரு விதத்தில் நல்லதுதான். இல்லையானால் வேறு விதமாகவும் விளைவுகள் மாறியிருக்கலாம். விரோதியாயிருந்தாலும், முழுமையாக நான் இந்தச் செயலில் ஈடுபடும்படிச் செய்த மாவலி முத்தரையனுக்கு ஒரு விதத்தில் நன்றி செலுத்தத்தான் வேண்டும். என் மேல் அறிவுப் பொறாமை ஏற்பட்டு மாவலி முத்தரையன் என்னுடைய பகைவனாக மாறவில்லை என்றால், நான் என் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதில் இவ்வளவு முனைந்திருக்க முடியாது. நம்முடைய முழுமையான பகைவன்தான் நமது முயற்சிக்குச் சுறுசுறுப்பும், உயிரும் ஊட்டுகிறான் என்பது எவ்வளவு பெரிய உண்மை?

தமக்குத் தாமே உள் முகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், அதில் நேரம் போவதே தெரியாமல் ஈடுபட்டிருந்தார். நண்பகலுக்கு மேல் முன்பு வந்த பூத பயங்கரப் படையின் அபாயத்தைத் தெரிவித்த அதே ஆபத்துதவிகள் மீண்டும் அவரைத் தேடி வந்தனர். இப்போது அவர்களிடம் பரபரப்போ, பதற்றமோ இல்லை. அமைதி தெரிந்தது.

“முன்பு தென்பட்ட இடங்களிலிருந்து பூத பயங்கரப் படைகள் பின் வாங்கித் திரும்பிச் சென்றுவிட்டார்கள். தாங்கள் அநுமானித்தபடியே நடந்திருக்கிறது. நாங்கள்தான் எங்கள் உணர்ச்சி வேகத்தில், ஏதேதோ நினைத்து விட்டோம். நமக்கு உடனே ஒர் அபாயமும் இல்லை. இடமும் மாற வேண்டாம்” - என்று அவர் கேட்பதற்கு முன் அவர்களாகவே கூறினார்கள். வந்தவர்கள் பின் வாங்கித் திரும்பி விட்டாலும், தொடர்ந்து மலையடிவாரத்தையும் சிலம்பாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/372&oldid=946589" இலிருந்து மீள்விக்கப்பட்டது