பக்கம்:நித்திலவல்லி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

379


குறளன், இளைய நம்பியையோ, பெரியவரையோ போய்ச் சந்தித்து, எல்லா விவரங்களையும் கூறுவான் என்ற ஒரே நம்பிக்கைதான், அவ்வளவு இருளின் நடுவேயும் அவன் முன் ஒளியாக இருந்தது. இந்தப் புதிய சிறையில் ஒளியோ, பகல் இரவோ, உலகத் தொடர்போ இல்லாத காரணத்தால் இனிமேல் காலம் நகர்வது கூடத் தெரியாமற் போய்விடும் போலிருந்தது. சிறையின் பெரிய இரும்புக் கதவில் கையும் பாத்திரமும் நுழைகிற அளவு துவாரம் இருந்தது. அந்தத் துவாரத்தின் வழியே வெளிப்புறம் இருந்து குரல் வந்தால், காலையோ மாலையோ உண்பதற்கு ஏதோ கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்தத் துவாரத்தில் உணவுக்காக அழைக்கும் குரலை வைத்துத்தான் கால ஒட்டமே அவர்களுக்குத் தெரிகிற அளவு உலகம் அவர்களைப் பொறுத்தவரை ஒடுங்கி விட்டது. மறுபடி உயிரோடு வெளியேறிக் காற்றையும், கதிரவன் ஒளியையும், வையையாற்றையும் கூடல் கோநகரையும் இப்பிறவியில் இனிமேல் கண்ணாரக் காண முடியுமா என்ற சந்தேகத்தை அநேகமாக அவர்கள் எல்லாருமே அடைந்திருந்தனர்.

இப்படி அவர்கள் இந்தப் புதிய காராக்கிருகத்தில் அடைக்கப்பட்ட மறு தினமே திடுக்கிடத்தக்க ஒரு துயரச் செய்தி கிடைத்தது அவர்களுக்கு,

மறுநாள் துவாரத்தின் வழியே உணவை நீட்டியவனிடம்-

“எங்களில் ஒருவராகிய அந்தப் புலித்தோல் அங்கியணிந்தவர் ஏன் இன்னும் இங்கே கொண்டு வந்து அடைக்கப்படவில்லை? அவர் என்ன ஆனார்? எங்கே போனார்?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.

வெளியே சிரிப்பொலிதான் ஏளனமாகக் கேட்டது. வேறு பதில் வார்த்தைகள் இல்லை. மறுநாள் மாவலி முத்தரையர் தீப்பந்தங்களோடும், ஐந்தாறு பூத பயங்கரப் படை வீரர்களோடும் சிறைக்குள் வந்தார். அழகன்பெருமாளை அடையாளம் கண்டு அவர் நேரே அவனருகே வந்து,

"அப்பனே! நேற்று உங்களில் யாரோ ஒருவன் இங்கே உணவு கொடுக்க வந்தவனிடம் அந்தப் புலித்தோல் அங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/378&oldid=946595" இலிருந்து மீள்விக்கப்பட்டது